விவசாயி மகன் பிரைந்தர் ஸ்ரனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

257

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று தெரிவுக் குழு அறிவித்தது.

இதில் பஞ்சாபை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீரர் பிரைந்தர் ஸ்ரன் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தார். அதே போல் ரிஷிதவானும் அறிமுக வீரராக ஒருநாள் அணியில் தெரிவாகி உள்ளனர்.

23 வயதான பிரைந்தர் ஸ்ரன் 11 முதல் தர போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 7 முதல் தர ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

தவிர, 2015-16 ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் அவர் இந்திய அணியில் தெரிவாகியுள்ளார்.

மேலும், இந்திய அணியில் ஜாகீர்கானுக்கு பின் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லை.

இதனால் இடது கை பந்து வீச்சாளரை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. இந்த காரணத்தினாலும் பிரைந்தர் ஸ்ரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட்டது பற்றி புதுமுக வீரர் ஸ்ரன் கூறுகையில், ”எனது தந்தை சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

நான் இந்திய அணியில் தெரிவு செய்யப்பட்டதற்கு குடும்பத்தினர் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அணிக்கு தெரிவு பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தெரிவு செய்யப்பட்டதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

SHARE