இந்தோனேசியா, ஜகார்த்தாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் கலந்த காபியால் இளம் பெண் ஒருவர் அவரது நீண்ட நாள் தோழியை படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜகார்த்தாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது குறிப்பிட்ட இளம்பெண் தமது தோழியுடன் அந்த உணவகத்திற்கு தேநீர் அருந்தும் பொருட்டு வந்துள்ளார்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் உணவக சிப்பந்திகள் வழங்கிய தேநீரில் குறிப்பிட்ட அந்த இளம்பெண் விஷம் தோய்த்து விட்டுள்ளார். விஷம் கலந்த காபி என அறியாமல் அருந்திய அந்த இளம்பெண் சம்பவயிடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண், அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்ற jessica wongso தற்போது விசாரணையை சந்தித்து வருகிறார்.
விஷம் அருந்தி பலியான Mirna Salihin மற்றும் jessica wongso ஆகிய இருவரும் நீண்ட 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிட்னியில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றுள்ளனர். மட்டுமின்றி ஒன்றாகவே தங்கியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மிர்னா தமது தோழியின் நலம் கருதி, அப்போது அவர் காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமை என்பதால் தங்களுக்குள் இருக்கும் உறவை கைவிட கோரியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்த wongso, மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மிர்னா தமது தோழியிடம் இருந்து விலகியே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்பேதும் இல்லாத மிர்னாவிடம் மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு whatsapp மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட வோங்ஸோ, மிர்னாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள தமது தோழி பூன் ஜுவிடா என்பவருடன் இணைந்து இந்த கொலை திட்டத்தை முடிவு செய்துள்ளார்.
தேநீர் விடுதிக்கு மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபி ஒன்றை வரவழைத்து அதில் விஷம் கலந்து வைத்திருந்துள்ளார் வோங்ஸோ. மிர்னா வந்து சேர்ந்ததும் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் குறிப்பிட்ட கோப்பையை மிர்னாவிடம் நீட்டி குடிக்க வைத்துள்ளார்.
ஆனால் ஒரு வாய் மட்டுமே அந்த தேநீரை அருந்திய மிர்னா, அதில் வேறுபட்ட சுவை கலந்திருப்பதை உணர்ந்து மேலும் அருந்த மறுத்துள்ளார். ஆனால் அருந்திய அந்த ஒரு வாய் காபியே அவரது உயிரை பறிக்க போதுமானதாக இருந்துள்ளது.
இச்சம்பவம் நடந்தேறும் ஓராண்டுக்கு முன்னதாகவே வோங்ஸோ தனது காதல் முறிவாலும், தோழியின் பிரிவாலும் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது முன்னாள் காதலின் வாகனத்தை சூறையாடியுள்ளார், மது போதையில் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.
தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவுஸ்திரேலிய பொலிசார் ஜகார்த்தா விசாரணை அதிகாரிகளுக்கு அளித்துள்ள ஆவணங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்ட வோங்ஸோ தற்போது மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கில் அவரை மேற்கொண்டு குற்றவாளியாக்கி தண்டிக்க முடியாது எனவும் அவுஸ்திரேலியா அதிகாரிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
மட்டுமின்றி வோங்ஸோ இந்த கொலையை செய்ததற்கான போதிய ஆதாரங்கள் எதுவும் இதுவரை ஜகார்த்தா பொலிசாரால் திரட்ட முடியவில்லை எனவும் அவுஸ்திரேலியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.