நாட்டில் அதிகரித்துச் செல்லும் வெப்பநிலை காரணமாக, யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்திலுள்ள வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இவ் அனர்த்தத்தில், வீட்டிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள், பணம், நகைகள், வீட்டுத்தளபாடங்கள் என அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும், தெய்வாதீனமாக எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.
கடந்த சில நாட்களாக, நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கடும் வெப்பநிலை நிலவுகின்றது.
இந்நிலையில், வீட்டிற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரம் வெப்பமாகி, இவ் அனர்த்தம் நிகழ்ந்திருக்கலாமென நம்பப்படுகிறது. மேலதிக விசாரணைகளை மல்லாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக, இன்றுமுதல் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.