கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் சில பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இப்பொழுது வெயில் காலம் ஏற்பட்டுவிட்டது. இதில் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர்சத்து குறையலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடும். இதனால் அடிக்கடி சிறுநீர் செல்ல நேரிடும் இது மேலும் நீரின் அளவினை உடலில் குறைக்கும்.
அதிக சூடு இல்லாமல் இருக்க உங்களை வீட்டுக்குள்ளேயே அடையச் செய்யக்கூடாது. காலை, மாலைகளில் வெளியே வாருங்கள். நடை பயிற்சி செய்யுங்கள். இன்சுலின், மருந்து இவை அதிக உஷ்ணம், உரையும் குளிர் இரண்டிலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு என்பதை அறியுங்கள். ஆகவே மருந்துகளை பாதுகாப்பாக வையுங்கள்.
* நன்கு தண்ணீர் குடியுங்கள். கை அருகிலேயே தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். அடிக்கடி சிறிது நீர் குடியுங்கள்.
* வெயில் காலம் என்பதால் உங்கள் சர்க்கரை அளவினை வீட்டிலேயே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதன்படி இன்சுலின் உபயோகப்படுத்துங்கள். (இன்சுலின் உபயோகிப்பவர்களுக்கு மட்டும்)
* மருந்து கைவசம் கை பையில் இருக்கட்டும்.
* சிறிய உணவு கைவசம் இருக்கட்டும்.
* தலை தொப்பி, கறுப்பு கண்ணாடி இவை வெளியில் செல்லும்பொழுது அவசியம் அணியுங்கள்.
* வெயில் உங்கள் சருமத்தினை எரிக்காத வகையில் தகுந்த பருத்தி ஆடைகளை உடலை மூடி அணிந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான். கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான்.