வெரஹெரவில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து இரண்டு தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (15.02.2024) இடம்பெற்றள்ளது.
இதன்போது மோதர பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குறித்த பொலிஸ் கான்ஸ்டபள் தனது காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக நேற்று (14.02.2024) மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அந்த அலுவலகத்தில் இருந்து தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்த பின்னர், அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுக்க சென்ற நிலையில் இரண்டு தேயிலை துாள் பொதிகளைத் திருடும் போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
திருடப்பட்ட இரண்டு தேயிலை பொதிகளினதும் பெறுமதி இரண்டாயிரத்து இருநூற்று நாற்பது ரூபாவாகும்.
இதன்போது சிவில் உடையில் வந்த அவர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காசாளர் பெண்களால் பிடிக்கப்பட்டு பொரலஸ்கமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்காக கொழும்பு வடக்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அபேபிட்டிய பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.