இளைஞர்கள் நாட்டிற்குள் நிலவும் சில தொழில்வாய்ப்புகளை நிராகரிப்பார்களாயின் அத் தொழில் வாய்ப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வரவேண்டி வரும் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொழில்வாய்ப்புகளைப் பெறுவதற்காக அமைச்சர்களின் காரியாலயங்களுக்கு முன்னால் மக்கள் காத்துக்கொண்டிருக்கும் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். மக்களுக்கு அரச தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு வெற்றிடம் இல்லை. அந்தளவுக்கு அரச திணைக்களங்கள் அனைத்திலும் தொழிலாளர்கள் நிரம்பியுள்ளனர்.
ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்க வேண்டிய அரச திணைக்களங்களில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வரையில் உள்ளனர். அவ்வாறான வேலைத்திட்டத்தில் நானும் கடந்த காலங்களில் பங்காளராகியுள்ளேன். உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவான பின்னர் வெற்றிடம் இல்லாத தொழில் வாய்ப்புகளுக்கும் தமது ஆதரவாளர்களை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். அதன்மூலம் அத்திணைக்களங்கள் மீண்டும் நஷ்டநிலைக்குச் சென்று விடுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் வழங்கப்படும் சம்பளத்தையும் விட அதிகளவான சம்பளம் பெறும் சாதாரண தொழில் வாய்ப்புகள் நாட்டில் உள்ளன. எனினும் அத்தொழில்வாய்ப்புகளை வகிப்பதற்கு எம்மவர்கள் வெட்கப்படுகின்றனர். இருந்தபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று கூலித்தொழில் செய்கின்றனர். இவ்வாறு சென்றால் நாட்டில் நிலவும் அவ்வாறான தொழில்துறைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும். அப்போது வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக கோஷமிட வேண்டாம்.
மேலும் சிலர் அரச தொழில்வாய்ப்புகளை எதிர்பார்க்காது முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாகவும் ஏனைய சுயதொழில்களிலும் ஈடுபடுகன்றனர். என்னைப் பெறுத்தவரை முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக தொழில்புரிபவர்கள் 35 வயதைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டுடன் முரண் படுகிறேன்.
ஏனெனில் தமக்கு தொழில்வாய்ப்பு இல்லாத சந்தர்ப் பத்தில் முச்சக்கர வண்டியையாவது ஓட்டித் தொழில் செய்து வாழ்க் கையை கொண்டு நடத்துவதற்கு அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித் துள்ளார்.
“இன்டபிரைஸ் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு மாத்தறை உயன்வத்தையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.