வெளிநாடு தப்ப தினகரன் திட்டம்? போலீஸ் எச்சரிக்கை

183

 

இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ. 50 கோடி வரை லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் திட்டமிட்டது அம்பலமானதை அடுத்து அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் சென்னைக்கு வந்துள்ளனர். டிடிவி தினகரன் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விமானநிலையங்கள் விழிப்புடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இரட்டை இலை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இந் சூழ்நிலையில் கடந்த 17ஆம் தேதியன்று டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் நடத்திய சோதனையில் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ரூபாய் 1.30 கோடியுடன் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன.

இரட்டை இலைக்கு லஞ்சம்
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் தரப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்ததாகவும், மேலும் 60 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுகேஷ் சந்திரா தெரிவித்ததாக டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரம் சிக்கியது
மேலும், சுகேஷ் சந்திரா – தினகரன் இருவரும் 40 நிமிடங்கள் பேசிய பதிவையும் டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வைத்துள்ளார்களாம். சமீபத்தில் பெங்களுருவில் இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, தனக்கு 10 கோடி ரூபாய் கமிஷனும், தேர்தல் அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் என சுகேஷ் சந்திரா பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் , வழக்கறிஞர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை அனைவரும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

தினகரன் முதல் குற்றவாளி
மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக தினகரனையும், இரண்டாவது குற்றவாளியாக சுகேஷ் சந்திராவையும் சேர்த்துள்ளனர். தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்குவதற்காக டெல்லி துணை கமிசன் சஞ்சய் ஷெராவத் சென்னை வந்துள்ளார். லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

வெளிநாடு செல்ல திட்டம்
தினகரனிடம் விசாரிக்க டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவரே போலீசுக்கு போட்டு கொடுத்துள்ளார்.

தப்பிச்செல்ல திட்டம்
டிடிவி தினகரனின் திட்டம் தெரியவந்ததை அடுத்து விமான நிலையங்களுக்கு போலீசார் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். டிடிவி தினகரனுக்கு மாறி மாறி சிக்கல் உருவாகியுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

SHARE