வடக்கில் இன்று வாழும் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்கையினை வெளிநாட்டில் தான்வாழ வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டு மாப்பிளைகளை தேடி அலைகின்றார்கள். இவ்வாறு வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தில் சில இளம் பெண்களில் வாழ்கை விபரீதத்தில் முடிகின்றது.
கொலையாகவும்,தற்கொலையாகவும், குடும்ப பிரிவினைகளை தூண்டும் செயல்களாகவும் உருவெடுத்துள்ளது. அண்மையில் யாழ் சுண்ணாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் 22 அகவையுடை ஜெனிற்றா என்ற யுவதி தற்கொலை செய்ய காரணமாக அமைந்துள்ளது.
இதேபோல் யாழ் அச்சுவேலி பகுதியில் கண்பார்வையின்மையினை காரணம் காட்டி காதலை பிரித்த பெண்ணின் பெற்றோர்களின் செய்பாட்டினால் இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியாவில் கத்திக்குத்தில் கொலையில் முடிந்த திருமணம் என்று நாள்தோறும் வடக்கு தமிழ் இளசுகளின் திருமண வாழ்க்கயில் கொலையும் பிரிவுமாகத்தான் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றது.
இன்றை வாழ்க்கை நடைமுறையில் ஒருத்தி ஒருவனை காதலிக்கின்றாள் தொடர்ந்து செல்லும் காதல் பெற்றோர்க்கு தெரியவரும் வேளையில் சாதி,தொழில்,படிப்பு, போன்ற சமூக சிந்தனைகளுக்கு பெண்ணின் பெற்றோர்கள் உள்வாங்கப்பட்டு காதலை பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். வெளிநாட்டு மோகம் கண்ணுக்குள் தெரிகிறது இதனால்தான் பல பெண்களுக்கு வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை மனதில் எழுகின்றது இது எல்லோருக்குமானதல்ல விதிவிலக்காக சில சம்பவங்கள் நிகழ்கின்றது.
இருமணங்கள் இணைந்த திருமணங்கள் நடைபெற்றாலும் வெளிநாட்டு வாழ்கை வாழத்துடிக்கும் பெண்களில் சில பெண்களின் கதைகள் கண்ணீர் கதைகளாகவே மாறுகின்றது. இதற்கு மாறாக சில ஆண்களின் கதைகளும் சோகக்கதைகளாக மாறுகின்றது. இறுதியில் தற்கொலையிலும் மனநிலை பாதிப்பிலும் தான் முடிகின்றது. கந்தரோடை பகுதியில் ஜெனிற்றாவிற்கு நடந்த சோக கதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெனிற்றா பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
ஜெனிற்றாவின் காதல் பெற்றோர்களுக்கு தெரியவர ஜெனிற்றாவை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்கள் இன்னிலையில் வெளிநாட்டு மாப்பிளையினை பார்த்து சம்பந்த கலப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை அறிந்த ஜெனிற்றாவின் காதல் மாப்பிளையின் வீட்டிற்கு சென்று தனது காதலின் உண்மையினை உணர்த்தியுள்ளார் இதனையும் மீறி திருமணம் நடக்குமாக இருந்தால் உயிர் ஒன்று பிரியும் அதற்கு உடந்தையாகாதீர்கள் என்ற தொனியில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஜெனிற்றாவை அவர்களின் பெற்றோர்களும் சகோதரர்களும் கண்டித்ததுடன் வீட்டு காவலிலும் வைத்துள்ளார்கள் அவரின் சகோதரி மற்றும் மச்சினி என மாறி மாறி ஜெனிற்றா எங்கு சென்றாலும் பின்னாலும் முன்னாலும் செல்லும் நிலையிலும் தொலைபேசிகூட பாவிக்க முடியாத நிலையிலும் வாழ்ந்து வந்த ஜெனிற்றா உண்மையாக காதலித்த காதலனை அடைய முடியத ஏக்கத்தவிப்பிலும் பெற்றோரின் எதிர்மறையான செயல்களாலும் மனவிரக்தியின் உச்சமாக தற்கொலைக்கு சென்றுள்ளார்.
அன்று வீட்டில் குறுகிய நேரத்தில் அங்கும் இங்கும் பார்த்த ஜெனிற்றா தனது பாதுகாவலர்களை காணாத நிலையில் வீட்டின் அறையிற் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு மனரீதியான பாதிப்பிற்கு பல்வேறு பெண்கள் உள்ளாகிக்கொண்டிருக்கின்றார்கள். அதிகரித்த வயது ஏற்ற வரன் கிடைக்குமா என்று ஏக்கத்தவிப்பில் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதேபோலத்தான் மறு புறத்தில் ஆண்களும் அதிக வயதில் வரன் கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள். திருமண வயதில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர்களின் கடமை அல்லது திருமண வயதில் உள்ள பிள்ளைகள் காதலித்து இருக்கிறார்களா என்பதை இனம் கண்டு அதற்கேற்றால் போல் தற்போது உள்ள பெற்றோர்கள் செயற்படவேண்டும். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முப்பது வயதை தாண்டியவுடன் வாழ்கையினை பற்றிய சிந்தனையில் மூழ்கிவிடுகின்றார்கள்.
இது ஒரு உளவியல் தாக்கத்தைக்கூட உண்டுபண்ணும் இதனால் விரக்தி,மனநிலை பாதிப்பு போன்ற அதனால் ஏற்படும் உடல் தாக்கம் போன்றவற்றுக்கு ஆளாக வேண்டிய நிலை காணப்படும். இந்த மாற்றத்தை உணர்ந்து பணத்திற்கும், சொத்திற்கும்,நிலையான அரசவேலைக்கும்,ஆசை கொண்டு திருமண வாழ்க்கை காலத்தை வீணடித்து விடாதீர்கள்.
இந்த உலகத்தில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஏதோ ஒருவகையில் நிம்மதி அற்று வாழ்பவனும்,சாதாரண தர மக்கள் வாழ்கையினை அனுபவித்து வாழ்வதும் வழமையாகி விட்டது சுற்றும் இந்த பூமி பந்தில் மனித நீரோட்டத்தில் இணைத்துக்கொண்ட நாங்கள் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கருத்திற்கு அமைவாக பெற்றவர்களின் செயற்பாடு ஊடாக பிள்ளைகளுக்கு நல்ல வாழ்கையினை அமைத்துக்கொடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிடினும் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
ஏவான்