
பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஸ் மத்திய வங்கிகளின் ஒதுக்கங்களை திருடி பெருமளவு பணப்பரிமாற்றத்தை பெற்றதாக கூறப்படும் இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஆறு பணிப்பாளர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு முதன்மை நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த தடையுத்தரவை நேற்று விதித்தார்.
சாலிகா என்ற பெயரில் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கே இந்த பணப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
பணபரிமாற்றம் மூலம் குறித்த அமைப்பு 81 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 20மில்லியன் டொலர்களை பெறும்போதே உண்மை வெளியாகி அது தடுக்கப்பட்டது.
இதன்போது பணம் அனுப்புவோர் இலங்கையில் உள்ள சாலிகா பௌன்டேசன் என்ற பெயருக்கு பதிலாக பண்டேசன் என்று பிழையாக எழுதியுள்ளனர்.
இதனை பரீட்சித்துப் பார்க்கும்போதே பாரியளவு பணபரிமாற்றம் மத்திய வங்கி ஒதுக்கங்களில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் வசிப்பதாக கூறப்படும் குறித்த அமைப்பின் பணிப்பாளர்களான எச் ஜி சாலிக பெரேரா, மியூரின் ரணசிங்க, பிரதீப் ரோஹித்த, சாந்த நாலக வலகுலுஆராய்ச்சி, சஞ்சீவ திஸ்ஸ பண்டார, மற்றும் ஷிராணி தம்மிக்க பெர்ணான்டோ ஆகிய பணிப்பாளர்களுக்கே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.