அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஓய்விற்குப் பின்னர் அதிகம் சம்பாதிக்கும் மனிதராக மாறியுள்ளார் என்பதை அண்மைக்காலமான தகவல்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டு ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தை விடவும் முன்னாள் ஜனாதிபதி ஆகியபின்னர் தான் ஒபாமா ஓய்வற்ற நிலையில் இருக்கிறார் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், இதர செயற்பாடுகள் போன்றனவற்றில் ஈடுபட்டுவருகின்றார். ஒரு தொலைக்காட்சிக்கான 90 நிமிடப் பேட்டிக்கு 4 இலட்சம் டொலர் பெறுகின்றார். அதுவும் அமெரிக்காவின் பொருளாதார நிலை குறித்தும், அதன் வளர்ச்சி, தாக்கம் குறித்தும் பேசியதற்காக அவர் இந்தத் தொகையினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிற்கு பல்வேறு தரப்பினரிடத்திலும் நல்ல மரியாதையும், வரவேற்பும் உண்டு. சாதாரண மக்களோடும், உடன் பணியாற்றிய சக ஊழியர்களோடும் வேறுபாடுகள் இன்றி சகஜமாக பழகும் இயல்பு கொண்டவர்.
இதனால் அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலக நாடுகளில் அதிகளவானவர்களால் நேசிக்கப்பட்ட ஒரு நபராகவும் இருந்துவருகின்றார். ஓய்விற்குப் பின்னர் அவர் தன்னுடைய நேரங்களை பல்வேறு பயன் உள்ள விடயங்களுக்காக செலவிட்டுவருகிறார்.
குறிப்பாக, முன்னர் சொல்லப்பட்டது போன்று உரையாற்றுவது, பொருளாதாரம் குறித்து பேசுவது என்று அவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்.
இது தவிர, தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஒபாமா எழுத இருப்பதாகவும், இதற்கு அவர் தன்னுடை்ய விருப்பத்தினை தெரிவித்திருப்பதாகவும் தெரியவருகிறது. அப்படி அவர் தன்னுடைய வாழக்கை வரலாற்றினை எழுதினால், 20 மில்லியன் டொலர் கிடைக்குமென்று கூறப்படுகிறது.
ஆக, ஒபாமா தன்னுடைய ஓய்வு காலத்திலும் உழைக்கும் மனிதராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். அத்தோடு இவரது மனைவி மிஷேல் ஒபாமா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றினை எழுதினால் அதற்கும் இவ்வளவு தொகை கிடைக்கும் என்கிறார்கள் அமெரிக்க விமர்சகர்.
எனவே ஒபாமா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சாதாரண மனிதரைப் போன்று இருந்தாலும் இப்பொழுது அவர் அதிகளவில் சம்பாதிக்கும் மனிதராக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.