வெள்ளை வானில் கடத்த முயற்சி

201

அனைத்து பல்கலைக்கழக மருத்துவப் பீடங்களின் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டாளரை இனந்தெரியாத குழுவொன்று வெள்ளை வானில் கடத்த முயற்சித்ததாக அந்த சங்கத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சைற்றம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்வொன்றை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறி சென்ற போது வெளியே வெள்ளை வானுடன் நின்ற சிலர் அவரை இழுத்துக்கொண்டு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்து மாணவர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கடத்தல் காரர்களிடமிருந்து அவர்களை மீட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸ் அதிகாரியொருவர் அவரை கைது செய்வதற்காகவே அவர்கள் வந்திருந்தாகவும் அவர் அண்மையில் சுகாதார அமைச்சு அலுவலகத்திற்குள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட வேண்டியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆரம்பத்தில் மாணவர் சங்க ஏற்பாட்டாளரை சிவில் உடையில் வந்த இனந்தெரியாதவர்களே இழுத்துச் சென்றதாகவும் கைது செய்ய வந்தால் அவர்கள் எதற்கு வெள்ளை வானுடன் சிவில் உடையில் வர வேண்டுமெனவும் அங்கிருந்த மாணவர்களும் தொழிற்சங்கத்தினரும் பொலிஸ் அதிகாரியிடம் கேள்விகளை எழுப்பியதுடன் இவ்வாறாக மாணவரை கைது செய்ய முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரை கைது செய்யாது வெள்ளை வானில் வந்தவர்கள் அப்படியே திரும்பி சென்றதாகவும் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE