வவுனியாவில் கடந்த வருடம் (2014 மார்கழி) ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பல கிராமங்களில் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்.சில கிராமங்களில் கூலித்தொழில் செய்யும் மக்கள் தொடர்ச்சியான மழை காரணமாக தொழில்வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் மிகவும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருந்தனர்.
ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிக்கொணரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகளை கருத்தில்கொண்டு வவுனியா பிரதேச செயலகத்தினால் வெள்ள நிவாரண உலர் உணவு முத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா கல்மடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றக்கிராமமான ஈஸ்வரிபுரம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலர் உணவு முத்திரைகளுக்கான உலர் உணவுப்பொருட்கள் இன்றுவரை வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர்.
வெள்ள நிவாரணம் என்பது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பரிதவித்து நிற்கும் மக்களுக்கு உதவியாக அந்தநேரத்தில் வழங்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.