வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றோம் – துரைராசசிங்கம்

612
தற்போது தெற்கில் சிங்களப் பெரும்பாண்மையின மக்களின் உணர்வைத் தூண்டுகின்ற விதத்தில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது தேசியத் தலைவர் சொல்வது போல நெருக்குவாறங்களுக்கிடையில் தான் இவ்வாறான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோவில் போரதீவில் இடம்பெற்ற வரவேற்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

மக்களின் தலைவர்களாக இருக்கின்ற நாங்கள் எங்களுடைய செயலினுடைய பொருள் உணர்ந்து செயற்பட வேண்டும். தற்போது கிழக்கில் இரண்டு மாகாண அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமை என்கின்ற ரீதியிலெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமை அமைந்திருக்கின்றது என்கின்ற விடயம் கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி எமது மக்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தினுடைய கருக்கள்.

இந்த ஆட்சி மாற்றத்தினுடைய அடுத்த படியான பொதுத் தேர்தல் அதிலும் எமது கோரிக்கைகளையெல்லாம் எமது மக்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள்.

இதன் போது எமது தலைவர் அவர்கள் மிக முக்கியமான விடயத்தைச் சொன்னார்கள் நீங்கள் இருபது பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அனுப்பி வைக்க வேண்டும் வருகின்ற ஆண்டு ஒரு அரசியற் திர்வுத் திட்டத்தை உருவாக்குகின்ற ஆண்டாக அமையும்.

இதே வேளை தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வருகின்ற அனைத்து உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ற செய்தியோடு செல்லுகின்ற போது நாங்கள் மிகப் பெரிய பங்குபற்றுதலை இந்த அரசியற் திட்டத்தை ஆக்குவதில் அளிக்கலாம் என்று சொன்னார்கள்.

அதனை எமது பிரதேசங்களைப் பொருத்த மட்டில் எமது மக்கள் கடைப்பிடித்திருக்கின்றார்கள். இதில இன்னுமொன்றை எம்மால் அனுப்பியிருக்க முடியும் ஆனால் அதனை எமது துர்ப்பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

தற்போது வருகின்ற 09ம் திகதி பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக அமைக்கப்படப் போகின்றது. அந்த அரசியல் நிர்ணய சபையில் எமது அரசியற் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஆராயப்படவிருக்கின்றது.

வழக்கமாக தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை தமிழ் இனம் தொடர்பாகச் சொல்லி இருக்கின்றார்கள். சர்வகட்சி மாநாடு பேச்சுவார்த்தை என்றெல்லாம் சொல்லி காலத்தை இழுத்தடித்து அதன் பின்னர் ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக அவற்றைச் சாடக்குச் செய்த வரலாறுகளும் உண்டு.

அந்த வரலாற்றிற்கு மாறாக இந்த வரலாற்றுத் தடத்தை மாற்றி திட்டமிட்ட படி இப்போது பிறந்திருக்கின்ற புத்தாண்டோடு சேர்த்து பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி இந்த நாட்டுக்கு அரசியல் அமைப்பை ஆக்குகின்ற செயற்பாட்டுக்கு இந்த அரசு முன்வந்திருக்கின்றது.

புதிய அரசியல் அமைப்பு என்பது பெரும்பாண்மையின மக்களுக்குத் தேவையானது அல்ல. இது தமிழர்களுக்கு நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த ஒன்று. எனவே தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையிலே தான் இந்த அரசியல் நிர்ணய சபை ஆக்கப்படுகின்றது என்கின்ற மிக முக்கியமான விடயத்தை தமிழ் அரசியற் தலைவர்களும் தமிழ் மக்களும் மனம் கொள்ள வேணடும்

எனவே இந்த அரசியல் அமைப்பு நமக்காக ஆக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கப்படுகின்ற போது அதில் நாம் இதுவரையில் தொடர்ச்சியாக வைத்த கோரிக்கைகளை யதார்த்த அடிப்படையில் நாம் முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் இந்த யதார்த்த அடிப்படை என்கின்ற சொல் மிக மிக முக்கியமானதாக இருக்கின்றது.

வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை என்கின்ற கொள்கையை நாங்கள் பலதடவைகளில் கடைப்பிடித்து வருகின்றோம். டொனமூர் சட்டம் வந்த போதும் எமக்கு பூரண சுயாட்சி வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தார்கள் அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் அன்று அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பிரதிநிதித்துவம் இன்றி எமது உரிமையை இழந்தோம், எமது குரலை இழந்தோம்.

அதன் பின்னர் எங்களுக்கென்று பல தீர்வுத் திட்டங்கள் வந்தன ஆகக் கடைசியாக வந்தது என்று 13வது திருத்தச் சட்டத்தைச் சொல்லலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ஆனால் அந்த ஒப்பந்தம் குறைபாடுடையது என்று எமது தலைவர்கள் சொன்னார்கள். அதனையும் வேண்டாம் என்று தூக்கியெறிந்து விட்டோம்.

அதன் பின்னர் ஏற்பட்ட கொடூரமான செயற்பாடுகளின் காரணமாக நாம் எவ்வளவு சொத்துக்களை இழந்திருக்கின்றோம். எங்களுடைய சந்ததியையே இழந்திருக்கின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தில் நாங்கள் மக்கள்  தொகை அடிப்படையில் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம் என்றால் 1987ம் ஆண்டு வந்த அந்த வாய்ப்பினை பயன்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வந்த வாய்ப்பினைப் பயன்படுத்தியிருந்தால் இந்த இழப்புகள் எமக்கு ஏற்பட்டிருக்குமா என்பதைப் பற்றி நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதன் பின் 1994ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியற் பேச்சுவர்த்தை தமிழர்களின் அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்ற போது வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லீம்கள் தொடர்பாகவும் ஒரு இணக்கப்பாடு தேவை என்கின்ற ஒரு முக்கியத்துவம் உண்டு இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். இது முத்தரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தது. இதன்போது ஒற்றையாட்சி முறை நீக்கி பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஒரு தீர்வுத் திட்டம் ஆக்கப்பட்டது. அந்தத் தீர்வுத் திட்டத்தைக் கூட எங்களால் செயற்படுத்த முடியாமல் போய்விட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் எமது இளைஞர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள் என்கின்ற உண்மையும் உண்டு. அவர்கள் உச்ச அதிகாரத்தைக் கொண்ட தமிழ் ஈழம் பெற்றிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள் ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பூகோள அரசியலில் ஏற்பட்ட மாற்றம் எமது போராட்டத்திற்கு இடராக இருக்கும் என்கின்ற விடயத்தை அறிந்து எமது அன்டன் பாலசிங்கம் அவர்கள் நாங்கள் நீலன் பீரிஸ் திட்டததை ஒத்த ஒரு தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர்ந்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் தட்டிக்கழிக்கப்பட்டன பின்னர் முள்ளி வாய்க்காலில் எமது உன்னத தியாகங்கள் முடிவுறுத்தப்பட்டன.

எங்களின் தலைவர் சொல்லுவார் நாங்கள் குப்புற விழுந்து கிடந்தவர்கள் தற்போது மெல்ல மெல்ல எழுந்திருக்கின்றோம். இன்று எதிர்க்கட்சித் தலைமை என்கின்ற அந்தஸ்தைத் தமிழினம் பெற்றிருக்கின்றது. இந்த மகுடத்தோடு நாம் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆக்குவதற்காக இருக்கின்றோம்.

இந்த அமைப்புச் சட்டம் தமிழர்களினால் ஆக்கப்படுவதாக இருந்தாலும் வெறுமனே தமிழர்களுக்காக மட்டும் ஆக்கப்படுகின்ற ஒன்று அல்ல. அரசியல் அமைப்புச் சட்டம் அக்கப்பட்டதன் பின்னர் இது மக்கள் தீர்ப்பு என்கின்ற பொது வாக்கெடுப்பிற்குப் போக வேண்டிய அவசியம் இருக்கின்றது.

எனவே சிங்களத் தலைவர்கள் பெரும்பாண்மையின மக்களிடம் சென்று இந்த அரசியல் அமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கின்ற அவசியம் இருக்கின்றது. நாங்கள் எங்களுடைய பிரதேசத்தில் முஸ்லீம் மக்களையும் சேர்த்துக் கொண்டு இந்த தீர்வுத் திட்டத்திற்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

எனவே பேரினவாதம் பேரின மக்கள் முஸ்லீம் மக்கள் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்கின்ற அவசியத்தோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவை அனைத்திற்கும் மேலாக எந்தளவிற்கு நாங்கள் நியாத்துவத்தோடு இருக்கின்றோம் என்பதை உலக நாடுகள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. அரசியற் பேச்சுவார்த்தையில் இரண்டு பக்க இணக்கம் மிகவும் இன்றியமையாதது. இவ்வாறான இணக்கப்பாடு என்பது மூன்றாம் தரப்பு என்று சொல்லுகின்ற உலக நாடுகள் தமிழர்கள் கேட்பது நியாயம் என்று சொல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

நாங்கள் இழந்த இழப்புக்கள் நாங்கள் போராடிய காலங்கள் என்பவைகள் மட்டும் எமது அரசியற் தீர்வினுடைய மூலப் பொருளாக அமைந்து விட மாட்டாது. நாம் எதைப் பிடித்துக்கொள்ளப் போகின்றோம் அதைப் பிடித்துக் கொண்டு எமது சமுதாயத்தை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றோம் என்ற வகையில் நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு இருக்கின்ற போது சிலர் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவை என்கின்ற ஒன்றை ஆரம்பித்து தமிழ் மக்களுக்கான அரசியல் அமைப்புத் தீர்வுத் திட்டம் பற்றி வரைபு ஒன்று செய்வதற்கு புறப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் யாரையும் வேண்டுமென்று குறை சொல்லவில்லை. ஆனால் யதார்த்தத்தைச் சொல்லித் தான் ஆக வேண்யடி கடப்பாடு இருக்கின்றது.

இருபது பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று எமது தலைவர் சொன்ன போது அதற்கு எல்லோரும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது எமது கட்சி வடமாகாண மக்கள் கிழக்கு மாகாண மக்கள் புலம்பெயர் சமுகங்கள் என எல்லலோரும் சேர்ந்து உழைத்ததன் பேரில் உருவாக்கப்பட்ட முதலைச்சர் அவரது கட்சியின் இலக்கைப் பெற்றுத் தரும் வகையில் செயற்பட்டிருக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு அவருக்கு இருக்கின்றது.

அதனைச் செய்யாமல் இருப்பதற்கு எந்த விதத்திலும் அவர் நியாயம் கற்பிக்க முடியாது. அவர் அதைச் செய்திருக்க வேண்டும் அவர் அப்படிச் செய்திருந்தால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை இன்னும் கூடியிருக்கும்.

அவர் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும் தான் இந்த மக்கள் இட்ட ஆணையைச் சரியாகக் கடைப்பிடித்திருக்கின்றேனா என. அவர் இப்போது அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கு புறப்பட்டிருக்கின்றார். பல்கலைக்கழகப் பேராசிரோ அல்லது வெளிநாட்டு நிபுனர்களோ அரசியலமைப்பை ஆக்க முடியும். ஆனால் அவை நடைமுறைக்கு ஒத்தவையாக இருக்க முடியாது.

எனவே நடைமுறையில் யாதார்த்தத்தில் எங்களுடன் பேசுகின்றவர்களுடன் பேசி அவர்களுடன் இணக்கபாடு ஒன்றை ஏற்படுத்தி நாங்கள் அரசியலமைப்பை ஆக்குகின்ற மிகப் பெரிய கைங்கரியத்தைச் செய்ய வேண்டியவர்களா இருக்கின்றோம்.

தற்போது தெற்கில் உதயகம்மன்பில, சம்பிக்க ரணவக்க ஆகியோர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பெரும்பாண்மையின மக்களின் உணர்வைத் தூண்டுகின்ற விதத்தில் சிங்கத்தின் இரத்தம் என்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது தேசியத் தலைவர் சொல்வது போல இவ்வாறான நெருக்கடிக்கு இடையில் தான் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது.

இப்போது ஒரு நியாயமான நிலை இருக்கின்றது. ஏற்படப் போகும் தீர்வுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வருகின்ற போது அங்குள்ள மக்களை இந்தத் தீர்வுத் திட்டத்திற்குச் சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ரீதியில் சிங்களத் தலைவர்களில் எமது கருத்தக்களை ஏற்றுக் கொள்ளுகின்ற தலைவர்களுக்கு கைகொடுக்கின்ற ரீதியில் நாங்கள் செயற்பட வேண்டும்.

அதற்காக அடிப்படையான விடயங்களில் எவ்வித விட்டுக் கொடுப்புகளையும் நாங்கள் செய்ய மாட்டோம் ஆனால் தேவைக்கேற்ற விதத்தில் அவற்றை நாங்கள் சரிசெய்ய வேண்டிய இடங்கள் வருகின்ற போது அவற்றை நாங்கள் சரி செய்வோம்.

இந்த அரசியற் தீர்வுத் திட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் நடந்து கொள்ளவில்லை எனச் சிலர் கூறுகின்றார்கள். இது முற்றிலும் பொய்யான ஒரு செய்தி. எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் சரி இந்தத் தீர்வுத் திட்டம் தொடர்பில் கருத்துரைகள் நடந்தாலும் சரி இவையனைத்தையும் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவில் நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம் அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்த செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு எந்த இலக்கு நோக்கிச் செல்கின்றது எந்த வகையில் அரசியற் தீர்வுத் திட்டம் தொடர்பாக கருத்துக்களை வைத்திருக்கின்றது என்று.

எனவே எமக்கெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மை வழிநடத்திச் செல்லும் எந்த இடத்தில் நாங்கள் நிற்க வேண்டும், எந்த இடத்தில் நாங்கள் நகர வேண்டும், எந்த இடத்தில் வேகமாகச் செல்ல வேண்டும், எந்த இடத்தில் மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட தலைவர் எமக்கு இருக்கின்றார். வெறுமனே புத்தகத்தில் எழுதுவதற்கல்ல. யார் யாருடைய மனநிலை அறிந்து எவர் எவருடன் எவ்வௌ;விதமாகப் பேச வேண்டும் என்கின்ற முழு ஆற்றலும் எங்களுடைய தலைவருக்கு உண்டு.

சந்திரிக்கா அம்மையார், ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரை இதற்கு எவ்வாறு அனுசரிக்கச் செய்ய முடியும், இவர்கள் தளம்பும் சமயத்தில் எங்கிருந்து இவர்களுக்கு ஆலோசனை கொடுக்கக் கூடிய ஆளிகளை அழுத்த முடியும் என்பதையெல்லாம் அனுபவத்திலே தெரிந்து வைத்திருக்கின்றார். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல அவர்கள் ஆக்கப் போகின்ற அரசியல் அமைப்புச் சட்டம் ஒருபோதும் நடைமுறைக்கு வராது.

ஆனால் யதார்த்த ரீதயிலான நடைமுறை அறிந்த தலைமை எமக்கு இருக்கின்றது. அவரின் பின்னால் செல்வோம் அதன் மூலம் 2016ல் முன்னர் குறிப்பிட்டது போல் வௌ;வேறு இனத்தவரும் வாக்களிக்கக் கூடிய விதத்தில் ஒரு சிறந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆக்குவதற்கு நாம் பங்களிப்போம்.

வீணே வந்து இது இது தரவில்லை ஆனால் இவர்கள் இதனை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் இவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்று சொல்லுவார்கள், எழுதுவார்கள், வசை பாடுவார்கள் ஆனால் எடுக்கக் கூடியதில் ஆகக் கூடிய தீர்வுத் திட்டத்தினை எடுப்பதற்கு எமது தலைமையும் நாங்களும் செயற்படுவோம்.

அதுபோல் எமது மக்களும் வெறும் ஓசைகளுக்கு காது கொடுக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் ஒன்றித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE