ஷகிப் அல் ஹசன் இலங்கைக்கு விளையாட வருவதை விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர் டிரெவின் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
டைம் அவுட் சர்ச்சை
இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதிய உலக கோப்பை போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் அவுட் ஆகாத முறையில் “டைம்ட் அவுட்” அடிப்படையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
உடைந்த ஹெல்மட்டை மாற்றி கொள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையீடு செய்து ஏஞ்சலோ மேத்யூஸை வெளியேற்றினார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தரப்பு விளக்கத்தை ஷகிப் அல் ஹசனிடம் தெரிவிக்க முயன்றும், அதை நடுவரிடம் விவாதித்து கொள்ளுமாறு ஷகிப் அல் ஹசன் தெரிவித்து விட்டார்.
வங்கதேச அணி மற்றும் கேப்டன் ஷகிப் அல் ஹசனின் செயல் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, வங்கதேச அணியின் செயலுக்கு கடுமையான கண்டனமும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைக்கு விளையாட வரக்கூடாது
இந்நிலையில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனிடம் ஸ்பொர்ட்ஸ்மேன்ஷிப் இல்லை, எனவே அவர் இலங்கைக்கு விளையாட வருவதில் எங்களுக்கு விருப்பமில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர் டிரெவின் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் மற்ற போட்டிகளுக்காக இலங்கைக்கு விளையாட வந்தால் இலங்கை ரசிகர்கள் அவர் மீது கற்களை வீச நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளார்.