ஷசாங், அஷுதோஷ் போராட்டம் வீண்… பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அதிரடி

72

 

இன்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

நிதிஷ் ரெட்டி அதிரடி
23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவுசெய்தது. தொடர்ந்து ஐதராபாத் அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் வந்த வேகத்தில் திரும்பினார்.

பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 64 ஓட்டகள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 25 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஷசாங் போராட்டம் வீண்
ஆனால், சாம் கரன் , ஷிகந்தர் ராசா ஆகியோர் நிலைத்து ஆடி ஓட்டங்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 58 என இருந்தபோது சாம் கரன் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஷிகந்தர் ராசா 28 ஓட்டங்களில் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஷசாங் சிங் , அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியால் 26 ஓட்டங்கள் மட்டும் எடுக்க முடிந்தது.

ஷசாங் சிங் 25 பந்துகளில் 46 ஓட்டங்களும் , அஷுதோஷ் சர்மா 12 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

SHARE