ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் பின்னர், ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஹரின் பெர்னாண்டோவுக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதை அடுத்து அவரை ஆளுநர் முதலமைச்சராக நியமித்தார்.
இந்த நிலையில், தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என கூறி, ஷசீந்திர ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில் சட்டம் தொடர்பான குறைப்பாடுகள் இருப்பதாக கடந்த முறை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.