ஷெஷாத் 16 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

150

துபாயில் நடைபெற்ற டி10 போட்டி ஒன்றில், ஆப்கானிஸ்தான் வீரர் ஷெஷாத் 16 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

அணிக்கு தலா பத்து ஓவர்கள் கொண்ட டி10 போட்டிகள், துபாயில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில், பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்திஸ் அணியும், பிரெண்டன் மெக்கலம் தலைமையிலான ராஜ்புத்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜ்புத்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி துடுப்பாட்டத்தை துவங்கிய சிந்திஸ் அணி, 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் வாட்சன் 20 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்தார்.

அதன் பின்னர் விளையாடிய ராஜ்புத்ஸ் அணியில் மெக்கலமும், ஷெஷாத்தும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஷெஷாத் எதிரணியினர் பந்துவீச்சை நான்கு திசைகளுக்கும் அனுப்பினார்.

சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிய அவர் 12 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். அதன் பின்னர் சரவெடியாய் வெடித்த ஷெஷாத் 16 பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

மறுமுனையில் இருந்த அணித்தலைவர் மெக்கலம் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் 4 ஓவர்களிலேயே 96 ஓட்டங்கள் எடுத்து, ராஜ்புத்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் தனது பிட்னஸ் குறித்து ஷெஷாத் கூறுகையில், ‘நான் உடலைக் குறைக்க அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் உணவு விடயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை.

இந்திய வீரர் விராட் கோஹ்லி போன்று, தினமும் உடற்பயிற்சி எடுக்க வேண்டும் என கூறினால் என்னால் முடியாது. ஆனால் முயற்சி செய்கிறேன். விராட் போல சிக்சர் அடிப்பது பற்றி கேட்கிறார்கள்.

விராட் கோஹ்லியை விட எவ்வளவு தூரமாக சிக்சர் அடிக்க வேண்டுமோ, அவ்வளவு தூரமாக என்னால் அடிக்க முடியும். அதனால் அவரை போல் டயட் கடைபிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என தெரிவித்துள்ளார்.

SHARE