ஸ்மார்ட் மீற்றரால் மின் கட்டணம் அதிகரிக்குமா?

301
ஜனவரி 9ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீற்றர் மூலம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா? என்பது தொடர்பில் தற்போதே கருத்துத் தெரிவிக்க முடியாது என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

ஜனவரி 9ஆம் திகதி முதல்மின்சார சபையால் பல்வேறு புது திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கமைய வீடுகளின் மின்சார பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக “ஸ்மார்ட் மீற்றர்” எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் மின் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

“வீடுகளில் இரவு 7 மணிமுதல் 10 மணிவரையிலேயே அதிகம் மின் பாவனை செய்யப்படுகின்றது. மின் அழுத்தி, ஸ்திரி பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட காலை மாலை வேளைகளில் பயன்படுத்த முடியுமான பொருட்களும் இரவு வேளைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

இதனால் இக்காலநேரத்தில் பாரிய மின்வலு எமக்குத் தேவைப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இதனை எம்மால் சரியான முறையில் வழங்கமுடியாதும் போகலாம்.

இதனைக் கட்டுப்படுத்த மக்களது மின்பொருள் பாவனைக்கான நேரங்களை ஒதுக்கி அதனை அளவீடுசெய்வதற்கு மீற்றர் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

இதனை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இன்னும் இல்லை. இந்த திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிவருகின்றோம்”  என்று தெரிவித்தார்.

5555

SHARE