தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மலேஷியாவிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார்.
இது மிகவும் வெட்கத்துக்குரிய நடவடிக்கையாகும். மஹிந்த ராஜபக்ஷ இராஜதந்திர விஜயத்தை மேற்கொள்ளவில்லை. கட்சி மாநாட்டை புறந்தள்ளிவிட்டு ஏன் மலேஷியா செல்ல வேண்டும்.
எனவே சுதந்திரக் கட்சியினர் மஹிந்த ராஜபக்ஷவின் குணங்களை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மைத்திரிபால சிறிசேன என்பவர் நாட்டின் ஜனாதிபதியாவார். அவரினால் மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாதா? எதிர்க்கட்சியில் இருக்கும் போதுதானே கவலைப்பட வேண்டும். ஜனாதிபதி ஒருவரால் இலட்ச கணக்கில் கூட்டம் சேர்க்க முடியும்.
சுதந்திரக் கட்சி பெரும் பலவீனமாக இருப்பதாக நாம் நினைக்க கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெரும் மக்கள் கூட்டம் உள்ளது என்பதனை மாநாட்டில் பார்க்கலாம்.
சுதந்திரக் கட்சியை நாம் பாதுகாக்க வேண்டும். அது பழைமையான கட்சியாகும். இதனை அழிந்து போக விடகூடாது.
கேள்வி : உங்களுடைய கட்சி என்ன ?
பதில் : எனது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
கேள்வி : அப்படியாயின் சுதந்திரக் கட்சியின் மீது ஏன் இவ்வளவு அக்கறை?
பதில் : அப்படியல்ல, சுதந்திரக் கட்சி என்பது நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகும். அதனை பாதுகாக்க வேண்டும்.
கேள்வி : சுதந்திரக் கட்சி மாநாட்டிற்கு நீங்களும் பஸ்களில் சனம் ஏற்றி செல்ல போவதாக கூறுகின்றனரே?
பதில் : அது பொய்யாகும். நான் எதற்காக சுதந்திரக் கட்சியின் மாநாட்டிற்காக கஷ்டப்பட வேண்டும். ஜனாதிபதிக்குள்ள மதிப்பினை மாநாட்டில் கண்டு கொள்ள முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.