மலையக மாவட்டங்களிலுள்ள நகரங்களில் முக்கியமான நகரமான ஹட்டன் நகர் தற்போது நகரசபையாக உள்ளது. இதனை மாநகர சபையாக மாற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூரநோக்கின் முதற்படியே இன்றைய அபிவிருத்தித்திட்டத்திற்கு இடப்படும் அடித்தளமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் புகையிரத நிலையத்துக்கு சொந்தமான காணிப்பிரதேசத்தை ஹட்டன் நகர அபிவிருத்திக்காக கையேற்று வாகன தரிப்பிடமும், சிறப்பங்காடியும் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பல வருடங்களுக்கு மேலாக ஹட்டன் நகர வீதியின் பெரும்பகுதி தகரங்களால் ஆன மறிப்புகளைக்கொண்டே காணப்பட்டது. அதில் தங்கள் விளம்பரங்களை ஒட்டி அழுக்காக்கி வந்த அமைச்சர்கள் மத்தியில் அமைச்சர் திகாம்பரம் அந்த தகரங்களைக் கழற்றி எரிந்து அழகாக்கி இருக்கிறார். நுவரெலியா மாவட்ட நகர அபிவிருத்திக் குழுக்கூட்டம் பாராளுமன்றில் இடம்பெற்றபோது அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாங்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த இடத்தில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அமைச்சர் திகாம்பரம் குறித்த நிதியினைப் பெறுவதற்கும், புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த காணியைப் பெறுவதற்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வெற்றிகரமாக சாதித்துள்ளார். மக்களுக்காக கீழ் இறங்கிச்செல்லும் மனப்பக்குவம் இவருக்குண்டு. முன்னைய அமைச்சர்கள் இவ்வாறு விட்டுக்கொடுப்புடன் செயற்படாத காரணத்தினால்தான் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் நமக்குக் கிடைக்காமல் போயின.
நுவரெலியா நகர சினிசிட்டா மைதானத்துடன் கூடியதாக பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் அதில் அதிக கவனம் எடுத்து வருகிறார். நாங்கள் மூவரும் அன்று தேர்தல் காலத்தில் இணைந்து வாக்கு கேட்டதுபோல் இன்றும் இணைந்தே பணியாற்றி வருகிறோம். அன்று நாங்கள் கூறியது போலவே ஹட்டன் நகரை நகர சபையாக இருந்து மாநகர சபையாக மாற்றும் எமது தூரநோக்கு வேலைத்திட்டத்திற்கான அடித்தளமே இன்று இடப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்