புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புலி படத்தைப் பார்த்த ரஜினி காந்த் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
‘புலி படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்கள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம். குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ஹேட்ஸ் ஆப் டூ த புலி டீம்’ என்று பாராட்டியுள்ளார்.