உலகப்போக்கு
ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள்!
ச.நாகராஜன்
ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள் இப்போது அகலக்கால் வைத்துள்ளனர். கிறிஸ்தவ மதம் சார்ந்த மேலை நாடுகளையும் தீவிரவாதத்தால் நடுநடுங்கச் செய்ய வேண்டும் என்ற ‘பரந்த நோக்கத்தை’ இப்போது அவர்கள் கொண்டுள்ளதால் அவர்கள் அடையப் போவது என்ன?
இஸ்லாமே அழிந்து போக அல்லது செல்வாக்கு இழந்து போக வழிவகை செய்தவர்கள் ஆகப்போகின்றனர்.
இந்தியாவின் சகிப்புத்தன்மை எல்லையற்றது. உலக சரித்திரத்தில் இதற்கு உவமையாக இன்னொரு நாட்டைக் காண்பிக்க முடியாது.
ஹிந்து மதத்தின் பரந்த நோக்கம் ஒப்பற்ற தனி இலக்கணம் கொண்ட ஒன்று. இதற்கு ஒப்பான சர்வமத சமரஸம் என்னும் பரந்த நோக்கத்தைக் கொண்ட இன்னொரு மதம் இல்லை என்பதே உண்மை.
இதை ஆர்னால்ட் டாய்ன்பி போன்ற உலக சர்த்திர வல்லுநர்கள் முத்தாய்ப்பாக தங்கள் நூலின் இறுதி உரையில் எழுதி வைத்துள்ளனர்.
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, தாங்கள் நாட்டை விட்டு வெளியேறப் போகிறோம் என்று தெரிந்தவுடன் முழு முனைப்பு கொண்ட ஒன்றாக் ஆனது. இதன் விளைவே பாகிஸ்தான்.
அந்த பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்களும் கூட இஸ்லாம் கூறும் சுவர்க்கத்தைக் காணவில்லை. மாறாக தீராத வறுமையையும் ஓயாத சண்டையையும் எப்போதும் திகில கலந்த வாழ்க்கையையுமே கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் ஹிந்துக்களுடன் வாழ்ந்த முஸ்லீம்களின் நல்ல போக்கிற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அந்த நல்லை போக்கை பிரிட்டிஷார் கெடுத்தது உண்மை. அதைத் தீவிரப்படுத்தியது முஸ்லீம் தீவிரவாதிகள்.
சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம்.
கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் பத்தாம் தொகுதியில் 11-12-1942 தேதியிட்ட இதழில் தரும் செய்தி இது:
ஒரு முஸ்லீம் டெபுடி மாஜிஸ்ட்ரேட் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றும் நல்லவர். மாமிசத்தை அவர் தொட்டதே இல்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அவரும் மற்றவர்க்ளுடன் அழைக்கப்பட்டார்.
“நீங்கள் அனைவரும் துர்க்கையின் அருளை வேண்டுகிறீர்கள். அதற்காக இந்த பூஜையை நடத்தி அதற்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்கிறீர்கள். என்னையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் துர்க்காதேவியின் அருளைப் பெறுகிறேன்” என்று கூறிய அவர் பத்து ரூபாயை நன்கொடையாக அளித்தார்.
(1942இல் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை!)
கிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி அன்று அழைப்பு ஏதுமின்றி விழாவிற்குச் சென்ற அவர் கீர்த்தனையில் கலந்து கொண்டார். கடைசியில் கரமயோகம் பற்றி கீதை உபநிடதங்களை மேற்கோள் காட்டி அரிய சொற்பொழிவு ஒன்றையும் நிகழ்த்தினார்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் தனித்த ஒன்றாக அந்தக் காலத்தில் அமையவில்லை.ஊருக்கு ஒன்றிரண்டு இது போன்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
பிரிட்டிஷாரின் திட்டமிட்ட சதி வேலையே தீவிரவாதத்தை விதைத்தது. அது இப்போது வளர்ந்து அவர்களையே தாக்குகிறது.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக!
ஹிந்துக்களும் முஸ்லீம்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததை ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ என்ற பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒரு கட்டுரையாக வெளியிட்டது. இதை மேலே கூறிய கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் ஆறாம் தொகுதியில் 16-12-1938 தேதியிட்ட இதழில் வெளியிட்டது
அந்தக் கட்டுரை தரும் செய்தி இது:-
மைசூர் மாநிலத்தில் சித்ரதுர்க் மாவட்டத்தில் தவளப்பன குட்டா மலை என்ற செங்குத்தான மலை ஒன்று உள்ளது. இது ஹிந்துக்களாலும் முஸ்லீம்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு இடம். தவளப்பா என்ற சிவ பக்தர் கடைசியில் இங்கு வாழ்ந்த இடம் என்பதாலும் அவர் தவளப்ப லிங்கத்தை வழி பட்டு வந்ததாலும் இந்த இடம் ஹிந்துக்களுக்குப் புனித இடமானது. முஸ்லீம்களுக்கோ சியாதுல்லா என்ற முஸ்லீம் சாதுவின் இடமாக அமைந்ததால் வழிபடும் இடமானது.
அடுத்து அனந்தப்பூர் மாவட்டத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக உள்ள ஒரு ஹிந்துக் கோவிலும் மசூதியும் உள்ளது. மொஹரம் மாதத்தில் ஹிந்துக் கோவிலிலிருந்து அதிகாரிகள் சுண்ணாமபுடன் பிரஷ்களை எடுத்துக் கொண்டு கொஞ்சம் பணத்துடன் மசூதிக்குச் சென்று அதை வெள்ளை அடித்துக் கொடுப்பது வழக்கம். மசூதியில் உள்ளோர் அனைவரும் அன்புடன் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் வழக்கமானது.
அதே அனந்தப்பூர் மாவட்டத்தில் சந்த்ரவதன மொஹியார் என்பவரது சமாதி உள்ளது. அதை ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வழிபடுகின்றனர்.
மதுரையின் அருகில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அதன் அருகிலேயே சிக்கந்தர் என்ற முஸ்லீம் பெரியாரின் சமாதியும் உள்ளது. இங்கும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வழிபடுகின்றனர்.
பெனுகொண்டா மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு இரு குருமார்கள் உள்ளனர்., ஒரு குரு ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இந்த வகுப்பினர் “ஹொன்னூர் ஃபகீர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த இணக்கத்தை மாற்றியது பிரிட்டிஷாரின் சூழ்ச்சி. அதனால் ஏற்பட்டது பாகிஸ்தான்!
தவறான வழிகாட்டுதலால் முஸ்லீம் இளைஞர்கள் தங்களின் ஒற்றுமை வழியை மறந்தனர். தீவிரவாதிகளோ அவர்களை மூளைச் சலவை செய்து தங்க்ள் வலையில் “அகப்பட்டவர்களை” இழுத்து நாசகார வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.
அனைத்து ஹிந்துக்களும் எளிய முஸ்லீம்களும் பெரும்பாலும் ஒற்றுமையுடனேயே இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இதை எந்த கிராமத்திலும் நகரத்திலும் நேரடியாகச் சென்று எவரும் காணலாம்.
இவர்களைப் பிளவுபடுத்துவது இஸ்லாம் கொள்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் கெடுமதியாளர்களே!
இவர்களால் இஸ்லாம் தன் பெருமையை இழப்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
இழந்து வரும் இந்தப் பெருமையை மீட்பது யார் கையில் உள்ளது?
நல்ல இஸ்லாமியர்களின் கையிலேயே உள்ளது.
இழந்த பெருமையை மீட்பார்களா? அல்லது இருப்பதையும் இழப்பார்களா?
காலம் பதில் சொல்லும்!