ஹெரோயின் வர்த்தகரான மொஹமட் சித்திக் 52 கோடி ரூபாயை வெளிநாட்டுக்கு கடத்தினார்

262
ஹெரோய்ன் விற்றதன் ஊடாகத் திரட்டிய பணத்தில் 52 கோடி ரூபாயை மொஹமட் சித்திக், வெளிநாட்டுக்கு கடத்திவிட்டதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அந்தப் பணம், உண்டியல் என்ற சட்டவிரோதமான முறைமையின் ஊடாக, டுபாய் ஊடாக பாகிஸ்தானுக்குக் கடத்தப்பட்டுள்ளது என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினாரால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேலதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் சித்திக்கின், மின்னஞ்சலை (ஈமெயில்) சோதனைக்கு உட்படுத்திய போதே, மேற்கண்ட விவரம் அம்பலமானது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது, ஏதாவது பயங்கரவாதச் செயற்பாட்டுக் குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டதா என்பது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான பாரிய ஹெரோயின் வர்த்தகரான மொஹமட் சித்திக், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்த நீதவான், சந்தேகநபரை, சிறைச்சாலை நீதிபதிகள் குழு முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்

SHARE