இன்று (14.12.2014) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வன்னி இன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராசா, சி.வி.கே.சிவஞானம், சி.சிறிதரன், அமைச்சர்.ப.சத்தியலிங்கம், அனந்தி சசிதரன், சரவனபவான், அன்ரனி ஜெகநாதன், சுமந்திரன், கஜதீபன், அர்னோல்ட் என தமிழரசுக்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சூடான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றது. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் பிரதானிகள் கலந்தாலோசித்துள்ளனர். இத்தீர்மானமானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டு அவர்களே இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வார்கள்.
இதன்போது இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடங்கள் குறித்தும் கல்துரையாடியிருந்தோம். இந்தக் கூட்டம் கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது. பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதன் போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்தனவாக இருந்தன. இன்று இந்த கருத்துக்களை உள்வாங்கி, தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஊடாக ஆராய்ந்து பொருத்தமான முடிவை எடுக்கவுள்ளோம். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கப்படும். அதன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் எடுக்கும்.- என்றார். ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்குப் பதிலளித்த மாவை எம்.பி, “நாம் அவ்வாறான ஒப்பந்தங்கள் எதனையும் செய்யவில்லை என்பதனை திட்டவட்டமாக சொல்லுகின்றேன்” – என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் மறைமுகமாக மைத்திரிபாலவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என கேட்டபோது – அவ்வாறு யாரும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னதாக இல்லை. ஆனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினர் என்று அறிகின்றோம். இன்றைய கூட்டத்திலும் எல்லோரும் வாக்களிப்பதற்கு வற்புறுத்தவேண்டும் என்ற கருத்தைத்தான் வலியுறுத்தினர்.- என்றார். ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில் தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என ஏன் கோருகிறீர்கள் எனக் கேட்டபோது – அது மக்களின் ஜனநாயக உரிமை. அதனைப் பயன்படுத்துமாறு கோருகின்றோம்.
வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம்.- என்றார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனின் இந்திய விஜயம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பானதா எனக்கேட்ட போது – அவர் ஏற்கனவே செய்து கொண்ட சத்திரசிகிச்சைக்காக வருடாந்தம் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சைக்காகவே அவர் இந்தியா சென்றுள்ளார். மாறாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டில்லி சென்று பேச வேண்டிய தேவை தற்போதைக்கு ஏற்படவில்லை.- என்றார் மாவை எம்.பி.
இச்சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதனை வீடியோவின் மூலம் காணலாம்.
TPN NEWS