பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ய முயன்ற பல்கலைக்கழக மாணவனை விளம்பரத்தின் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஏமாற்றியதனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் இக்மான்(IKMAN.LK) என்கின்ற விளம்பர சேவை ஊடாக அப்பிள் ஐ போன் 6 எஸ் (Apple i 6) ரகத்தை சேர்ந்த கைத்தொலைபேசி ஒன்றினை பார்வையிட்டு அவ்விளம்பரத்தை பிரசுரித்துள்ள நபரான ரத்னபுர பெல்மதுல்ல பகுதியை சேர்ந்த பி.ஜே சமிந்தவை( 791135214 எ) தொடர்பு கொண்டு தொலைபேசி வாங்குவது தொடர்பாக வினவியுள்ளார்.
இதன் போது அம்மாணவனிடம் குறித்த தொலைபேசி கொள்வனவு செய்வதற்கான எல்லா ஒழுங்கு முறையையும் கூறி சகல பணத்தையும் முழுமையாக செலுத்தினால் தொலைபேசியுடன் சில அன்பளிப்புகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
அத்துடன் விளம்பரம் பிரசுரித்த நபர் தான் ஒரு கடை ஒன்றை நடத்தி வருவதாக விளம்பரத்தில் காட்டியுள்ளதுடன் அதனை மெக்ஸ் மொபைல் இல 23 காலி வீதி கொடபொல மாத்தறை என பதிந்து தன்னை தொடர்பு கொள்ள 0729160502 /07291160500 என்ற இலக்கங்களை அதில் இணைத்துள்ளார்.
இந்த விளம்பரத்தை நம்பிய 1992 ஆண்டு பிறந்த அம்மாணவனை குறித்த நபர் தந்திரமாக கதைத்து கைத்தொலைபேசிக்குரிய பெறுமதியான ரூபா ஒரு இலட்சத்தி ஐந்து ஆயிரத்தை(105000/-) உடனடியாக வங்கியில் வைப்பிலிடுமாறு கூறி அதே வேளை இரு நாளைக்குள் கைத்தொலைபேசி கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உடனடியாக நம்பி செயலில் இறங்கிய மாணவன் பணத்தை முழுவதுமாக குறித்த நபரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டதுடன் அது தொடர்பாக அவருக்கு அறிவித்து உள்ளார்.
பின்னர் அந்நபர் தொலைபேசியை அனுப்பி வைப்பதாக கூறி விட்டு அம்மாணவனுடன் இன்று வரை தொடர்பு பேணாது மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவன் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.