கின்னஸ் சாதனை முயற்சியாக திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் 6,697 பேர் ஒரு மணிநேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்தனர். விபத்து மற்றும் நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் உடல் உறுப்புகளின் தேவையும் பெருகிக் கொண்டேசெல்கின்றது. மாற்று உறுப்புகள் பொருத்துவதன் மூலம் விலை மதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இருப்பினும் இதற்கான தேவைகள் எளிய மக்களுக்கு எட்டாதநிலையில் உள்ளது.
இறந்த பிறகு அழிந்துவிடும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கருத்து வலுப்பெற்று வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உடல் உறுப்புதான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு மணிநேரத்தில் 3 ஆயிரத்து 500 பேர் உடலுறுப்பு தானம் செய்ததுதான் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இதை முறியடிக்கும் விதமாக இந்த முகாமில் 1 மணி நேரத்தில் 6,697 பேர் உடலுறுப்பு தானம் செய்து சாதனை படைத்தனர்.
சாதனைகளை இந்திய அளவில் அங்கீகரிப்பதற்கான ஜெட்லி ரெக்கார்டு, இந்தியன்புக் ஆப் ரெக்கார்ட் குழுவினர் இவற்றை நேரில் பார்த்து உறுதி செய்து சான்றளித்தனர். இதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைக்காக நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளது. இவற்றை உறுதி செய்த பிறகு கின்னஸ் சாதனை முறையாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.