யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான சிறைச்சாலை இன்றைய தினம் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சிறைச்சாலை கட்டிடத்தை அமைச்சர் இன்றைய தினம் மாலை 2.30 மணிக்கு திறந்து வைத்தார்.
புதிய சிறைச்சாலை வளாகம், நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் மருத்துவமனை, மற்றும் கைதிகளுக்குப் போதிய இடவசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
2.5 ஏக்கர் நிலத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய சிறைச்சாலை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், ஆகியோர் மற்றும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போரின் போது, யாழ்ப்பாணத்தில் இருந்த சிறைச்சாலை அழிக்கப்பட்டதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலேயே சிறைச்சாலை தற்காலிகமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.