11 பேர் கடத்தல் விவகாரம்: வெலிசறை கடற்படை முகாம் இரகசிய அறைக்கு சி.ஐ.டி. சீல் வைப்பு

258

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த அறை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதில் கடத்தப்பட்டவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் துண்டு துண்டுகளாக வேறாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு மேலதிக அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா அடுத்த வாரம் அந்த அறையை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக மன்றில் அறிவித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, தனது பாதுகாப்பு உத்தியோகத்தரான நேவி சம்பத் எனப்படும் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க புலிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன் போதே கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய நேற்று மன்றில் ஆஜரான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, தனது மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தே மேற்படி இரகசிய அறை தொடர்பிலான விடயங்களை கூறினார்.

இதன் போது இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ள கடற்படை லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க மன்றில் ஆஜராகியிருந்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பான ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் உறவினர்களும் அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் இராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும் , கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடற்படையின் கடத்தல் குழுவொன்றினால் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட குறித்த 11 பேரும் வெலிசறை, கோட்டை மற்றும் திருகோணமலை கன்சைட் நிலத்தடி முகாம் ஆகிய கடற்படையின் கட்டுப்பாட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமையும் பலரிடம் விடுதலை தொடர்பில் கப்பம் கோரப்பட்டுள்ளமையும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இந் நிலையிலேயே இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா மன்றில் பின்வருமாறு தனது மேலதிக விசாரணை குறித்தான தகவல்களை பிரஸ்தாபித்தார்.

இந்த கடத்தல் தொடர்பிலான விசாரணைகள் பிறிதொரு விசாரணைகளில் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே ஆரம்பிக்கப்பட்டன.

லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க புலிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறி அப்போதைய கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த விசாரணை ஆரம்பமானது.

இதன் போதுதான் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகள் உள்ளிட்ட சான்றுகளை வைத்து இந்த 11 பேரும் கடத்தப்பட்ட விடயத்தை நானே வெளிப்படுத்தினேன்.

இந்நிலையில் இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பத் முனசிங்கவின் கீழ் பணி புரிந்ததாக கூறப்படும் கடற்படை லெப்டினன் கொமாண்டரான ஹெட்டிஆராச்சி என்பவரே இந்த ஐந்து மாணவர்கள் உள்ளிட்டோரை கடத்தி, திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற நிலத்தடி இரகசிய சிறைக்கு பொறுப்பாக இருந்த லெப்டினன் கொமாண்டர் ரணசிங்கவிடம் ஒப்படைத்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் தொடரும் நிலையில் மேலும் சில சான்றுகள் உறுதியானதும் சந்தேக நபர்களை கைது செய்து இந்த மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டியது எனது பொறுப்பாகும்.

இந்நிலையில் இவர்களில் வத்தளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட ஜோன் ரீட் என்பவர், கடத்தப்படும் போது பயணித்துக் கொண்டிருந்த டொயாடோ ரக வான் தொடர்பில் நாம் முன்னெடுத்த விசாரணைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலில் இந்த வான் திருகோணமலை கடற்படை தளத்தில் இஞ்சின், செஸி இலக்கங்கள் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுவது குறித்து எமக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த போதே வெலிசறை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய அறை குறித்து எமக்கு தகவல்களை வெளிப்படுத்த முடிந்தது.

இதனையடுத்து வெலிசறை கடற்படை முகாமுக்கு சென்ற நாம் அங்குள்ள குறித்த இரகசிய அறையை பார்த்தோம். அதில் மோட்டார் சைக்கிள், டொயாடோ ரக வான் மற்றும் கடத்தப்பட்ட மேலும் சிலர் பயணித்த வாகனங்களினுடையது என நம்பப்படும் வாகனங்கள் துண்டு துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டன.

72 துண்டுகள் அவ்வாறு அந்த அறையில் உள்ளன. அந்த அறையை நாம் தற்போது சீல் வைத்துள்ளோம். அந்த வாகன பாகங்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் குறித்த இரகசிய அறையில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வாகன பாகங்கள் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை நாம் எதிர்ப்பார்க்கின்றோம். இந்த வாகன பாகங்களை எதிர்வரும் வாரம் அரச இரசாயன பகுப்பயவாளர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

அத்துடன் ஐ. நா. அதிகாரிகள் சிலருடன் கடந்த ஆண்டு நான் திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள கன்சைட் முகாமுக்கு சென்ற போது அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் இதுவரை எமக்கு சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வறிக்கை கிடைக்கவில்லை. எனவே அது குறித்த விசாரணைகளும் நிலுவையில் உள்ளது.

ஆரம்பத்தில் இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் மட்டுமே நான் விசாரணை நடத்தியதால் துரிதமாக பல தகவல்கள் அம்பலமாகின. எனினும் இந்த விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியது எனது பொறுப்பாகும்.

எனவே எனக்கு இரு மாத கால அவகாசம் வேண்டும். இது தொடர்பிலான பூரண விசாரணை அறிக்கை ஒன்றினை அன்றைய தினம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்க்கிறேன்.’ என்றார்.

முன் வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்த கோட்டை பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாணயக்கார இது குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

SHARE