மலேசியாவில் உரிய அனுமதியின்றித் தங்கிப் பணியாற்றும் 117 வடகொரியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மலேசிய அரசு பணித்துள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் உறவினரான கிம் ஜோங் நம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையால், மலேசியாவில் உள்ள வடகொரியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதையடுத்து நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கிப் பணியாற்றிவரும் 117 வட கொரியர்கள் அடையாளம் காணப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு வார காலத்தினுள் அவர்கள் வெளியேற வேண்டும் என மலேசிய குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 117 பேரினது தங்குமிடம் உட்பட சகல தகவல்களும் தம் வசமிருப்பதாகவும், ஏழு நாட்களுக்குள் அவர்களில் எவரேனும் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண நடைமுறைதானா அல்லது கிம் ஜோங் நம்மின் கொலையை அடுத்து மலேசிய அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கையா என்பது பற்றி குறித்த அமைச்சு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.