சி.எஸ்.சி.எல். குளோப் என்று அழைக்கப்படும் அக்கப்பல் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்திலிருந்து கடந்த டிசம்பர் 8 அம் தேதி 19100 கண்டெய்னர்களுடன் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. 20 அடி உயரம் கொண்ட இந்த கண்டெய்னர்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால் அது எவரெஸ்ட் சிகரத்தை விட ஐந்து மடங்கு உயரமாக கொண்டதாக இருக்கும்.
தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் 1,84000 டன் எடை கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிக உயரமான கட்டிடமான ஷார்டின் உயரம் 1014 அடி, ஆனால் இந்தக் கப்பலோ 1312 அடி நீளம் கொண்டது.
சீனாவிலிருந்து கிளம்பி 11067 மைல் பயணித்த சி.எஸ்.சி.எல். குளோப் சூயஸ் கால்வாயைக் கடப்பதற்கு முன்னால் மலேசியாவின் கேலங் துறைமுகத்திற்குச் சென்று சரக்குகளை ஏற்றிக் கொண்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 குழுவினருடன் பிரிட்டனின் பெலிக்ஸ்டோ துறைமுகத்திற்கு இன்று மதியம் 1 மணிக்கு அக்கப்பல் வந்து சேர்ந்தது.
”பெலிக்ஸ்டோ துறைமுகத்திற்கு இது மிகவும் அற்புதமான நாள். சீனா ஷிப்பிங் கண்டெய்னர் குளோப் இங்கு வந்ததால் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று பெலிக்ஸ்டோ துறைமுகத்தின் தலைமை நிர்வாகி கிளம்ன்ஸ் செங் தெரிவித்தார்.