கட்டலோனிய பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் அரசியலமைப்பின் 155 ஆவது சரத்தை அமுல்படுத்தப்போவதாக ஸ்பெயின் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மறுபுறம் ஸ்பெயின் மத்திய அரசு தொடர்ந்து அடக்குமுறையில் ஈடுபட்டால் சுதந்திர பிரகடனத்தை வெளியிடுவதாக கட்டலோனிய தலைவர் எச்சரித்துள்ளார்.
கட்டலோனிய பிராந்தியத்தை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று வரும் சனிக்கிழமை கூடவிருப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார். 1970களின் பிற்பகுதியில் ஸ்பெயினில் ஜனநாயகம் திரும்பியபின்னரான ஒரு முன்னுதாரம் இல்லாத நகர்வாகவே ரஜோயின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவினை பிரசாரத்தை நிறுத்துவதற்கு கட்டலோனிய தலைவர் கார்லஸ் புயிக்டெமொன்டுக்கு ஸ்பெயின் அரசு நேற்று காலை 10 மணி வரை கெடு விதித்திருந்தது. எனினும் அதனை பொருட்படுத்தாத புயிக்டெமொன்ட் உத்தியோகபூர்வ சுதந்திர பிரகடனம் ஒன்றை வெளியிடுவதாக மத்திய அரசை எச்சரித்திருந்தார்.
இந்த இரு அறிவுப்புகளும் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் ஸ்பெயினின் அரசியல் இழுபறியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த பதற்ற சூழல் ஐரோப்பிய மண்டலத்தின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாட்டின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதோடு யூரோ மண்டலத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்பெயின் பிரதமருக்கு புயிக்டெமொன்ட் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “அரசு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி அடக்குமுறையை தொடர்ந்தால் கட்டலோனிய பாராளுமன்றம் அதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி உத்தியோகபூர்வ சுதந்திர பிரகடனத்திற்கான வாக்கெடுப்பை நடத்தும்” என்றார்.
எனினும் கட்டலோனிய சுதந்திர பிரகடனம் எப்போது இடம்பெறும் என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை. அவ்வாறான பிரகடனத்திற்கு பிராந்திய பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவையாக உள்ளது. எனினும் சுதந்திரத்திற்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த வாக்கெடுப்பை நடத்த கோரி வருகின்றனர்.
பிராந்தியம் ஒன்று சட்டத்தை மீறினாலேயே 1978 அரசியலமைப்பின் 155 ஆவது சரத்தை ரஜோய் அமுல்படுத்த முடியும். குறைந்தது அடுத்த வாரம் ஆரம்பம் வரை அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாதுள்ளது. அதற்கு முன்னதாக இந்த சட்டத்தை அமுல்படுத்த ஸ்பெயின் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவேண்டியுள்ளது. இது பிரிவினைவாதிகளுக்கு கடைசி நேரத்தில் ஒருதலைப்பட்சமாக சுதந்திர பிரகடனத்தை வெளியிடவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
“கட்டலோனியாவின் சகவாழ்வு மற்றும் பொருளாதார கட்டமைப்பை பாதிக்கும் வகையிலான கட்டலோனிய அரசின் வேண்டுமென்ற, திட்டமிட்ட செயற்பாட்டை கண்டிக்கிறோம்” என்று ஸ்பெயின் அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“சட்ட ஒழுங்கை மீளக்கொண்டுவர ஸ்பெயின் அரசு அதனால் முடியுமான அனைத்தையும் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் சர்வாதிகாரி ஜெனரல் பிரான்கோ மரணித்து மூன்று ஆண்டுகளின் பின் நாட்டின் ஜனநாயக ஆட்சியை பலப்படுத்த 1978 அரசியலமைப்பின் 155 சரத்து கொண்டுவரப்பட்டது. இது பிரச்சினையின்போது பிராந்தியங்களில் மத்திய அரசின் நேரடி ஆட்சியை கொண்டுவர அனுமதிக்கிறது. எனினும் இந்த சட்டம் இதற்கு முன் அமுல்படுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி கட்டலோனிய பிராந்தியம் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பில் அந்த பிராந்தியம் தனிநாடாக சுதந்திரம் பெறுவதற்கும் அதிகப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்தே ஸ்பெயின் மத்திய அரசுக்கும் கட்டலான் பிராந்திய அரசுக்கும் இடையிலான முறுகல் வெடித்தது. இந்த வாக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என கூறியது.
பிராந்திய பொலிஸ் மற்றும் நிதி முகாமையை பறிப்பது மற்றும் அவசர தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் மத்திய அரசு 155 சரத்தை அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சட்டத்தின் மூலம் பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை முழுமையாக பறிக்கும் அதிகாரம் இல்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் பிராந்திய பாராளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கட்டலோனியா ஸ்பெயின் நாட்டிலுள்ள தன்னாட்சி பிரதேசம் ஆகும். தன்னாட்சி பிரதேசமாக இருந்த கட்டலோனியாவுக்கு, கடந்த 2005 ஆம் ஆண்டு, கட்டலோனிய மொழி, வரி மேலாண்மை, நீதித் துறை நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், அப்பகுதிக்கு ‘நாடு’ என்னும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி ஸ்பயின் நாட்டு அரசியலமைப்பு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு ரத்து செய்தது தனி நாட்டு கோரிக்கையை வலுப்பெறச் செய்தது.
கட்டலோனிய பாராளுமன்றத்தில் பிரிவினைக்கான ஆதரவு பெரும்பான்மையாக இருந்தாலும், ஸ்பெயின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட பெரும்பாலானோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.