14 அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, லக்ஸ்மன் கிரியல்ல, கபீர் ஹாசிம் உள்ளிட்ட பதினான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளன.
அனைத்து சாட்சியங்களுடனும் குறித்த அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் அம்லப்படுத்தப்பட உள்ளது.
சுனில் ஹந்துனெத்தி ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செல்வதனைப் போன்று இந்த ஆவணங்கள் தயாரிக்கப்படவில்லை.
அனைத்து காரணிகளும் ஆதாரங்களும் உள்ளடக்கி இந்த மோசடிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளன.
மஹாபொல நிதியத்தில் 1.5 பில்லயின் மோசடி இடம்பெற்றுள்ளது நிதி அமைச்சரின் நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹோட்டலில் தங்கியிருந்த செலவுகள் நிதி அமைச்சின் ஊடாக செலுத்தப்படுகின்றது என மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் மீது குற்றச்சாட்டு
அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கு எதிராக மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை செய்யவுள்ளதாக மஹிந்த தரப்பு கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
1.5 பில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்படவுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமமந்திரி மற்றும் நிதியமைச்சருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்காலத்தில் 14 அமைச்சர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளதாக அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.