தமிழக அரசியலின் மிகப்பெரிய தலைவராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 50 ஆண்டுகள் இருந்த கலைஞர், நேற்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணியளவில் இயற்கை எய்தினார்.
தேசிய அளவில் கலைஞர் மிகப்பெரிய தலைவர் என்பதை நிரூபிக்கப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். தமிழக மற்றும் இந்திய அரசியலில் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர் கலைஞர். முதல்வராக இருந்து தமிழுக்கும், தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். பல பிரதமர்களையும் பல முதல்வர்களையும், அரசியல் களத்தில் கண்ட பெருமை உடையவர்.
ஜவஹர்லால் நேரு, குல்சரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், ஹெச்.டி. தேவ கௌடா, இந்தர் கே. குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என 15 பிரதமர்கள் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கலைஞர்.
அதுபோன்று, ராஜாஜி முதல் டி.பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 12 முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்த பெருமை கலைஞரையே சேரும்.