எனது காதலனை டிசம்பரில் கரம்பிடிப்பேன் – சாய்னா நேவால்

147

காதலன் காஷ்யப்பை டிசம்பர் 16 ஆம் திகதி கரம் பிடிக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னணி பட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் முன்னணி பட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், சக வீரரும், தன்னுடன் ஒரே அக்கடமியில் பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் குறித்த விவகாரம் குறித்து சாய்னா நேவால், காஷ்யப் ஆகியோர் எவ்வித தகவலும் தெரிவிக்காது அமைதியாக இருந்தனர்.

இந்த நிலையில் காஷ்யப்பை டிசம்பர் மாதம்  16 ஆம் திகதி கரம் பிடிக்க இருப்பதை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார்.

இது குறித்து சாய்னா நேவால் அளித்த ஒரு பேட்டியில், ‘2007 ஆம் ஆண்டு முதல் காஷ்யப்பை காதலித்து வருகிறேன். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தான் இருவரும் திருமணத்தை தாமதப்படுத்தினோம். போட்டி நிறைந்த உலகில் நாம் வசித்து வருகிறோம். ஒருவருடன் நெருக்கமாகுவது என்பது கடினமானதாகும்.

ஆனால் நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் எளிதாக ஒருவருக்கொருவர் நெருங்கிப் பேசினோம். காதலை என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வது வாடிக்கையாகும். நான் யாருடன் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் எங்கள் காதலை புரிந்து கொண்டனர்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE