ஜேர்மனியிலுள்ள அகதிகள் மையம் ஒன்றில் அகதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நான்காண்டுகளுக்குமுன் ஜேர்மனியின் Burbach என்னும் சிறிய நகரத்தில் அமைந்துள்ள அகதிகள் மையம் ஒன்றில் அகதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பான படங்களும் வீடியோக்களும் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு வழக்கறிஞர் ஒருவர் தனது அறிக்கையில், இதுவரை வெளியான விடயங்கள் குறைவு என்றும், 9 மாதங்களாக அந்த மையத்தை நடத்துபவர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூக சேவகர்களால் அகதிகள் தொடர்ந்து துஷ்பிரயோகிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
அகதிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது படங்களாக பதிவு செய்யப்பட்டதோடு, வீடியோக்களாகவும் பதிவு செய்யப்பட்டது.
அந்த புகைப்படங்களில் ஒன்றில், ஒரு பாதுகாவலர் தரையில் கிடக்கும் அகதி ஒருவரின் கழுத்தை மிதித்தவாறு போஸ் கொடுத்திருந்தார்.
ஒரு வீடியோவில் அகதி ஒருவர் வாந்தியின் மீது படுக்க வற்புறுத்தப்படுவது பதிவாகியிருந்தது.
உண்மையில் அந்த புகைப்படத்தில் கீழே கிடக்கும் நபர் பாதுகாவலர்களால் அடித்து உதைக்கப்பட்டு சுயநினைவிழக்கச் செய்யப்பட்ட பிறகு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
பிரச்சினை தீர்க்கும் அறை என்று ஒன்று உருவாக்கப்பட்டு, சிகரெட் பிடித்தல் போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, மிருகத்தனமாக தாக்கப்பட்ட விடயங்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன.
தற்போது, தாக்கியவர்கள், துஷ்பிரயோகம் நடப்பது தெரிந்தும் தடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், என 30 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீதான விசாரணை துவங்கியுள்ளது.
இந்த அராஜக செயல்கள் வெளியானதையடுத்து, தனியார் நிறுவனம் ஒன்றின் பொறுப்பில் இருந்த அகதிகள் மையம், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.