18 சிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கொஹூவெல பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கொழும்பிற்கு அருகாமையில் உள்ள நகரமொன்றின் சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் 18 சிறுமிகளை குறித்த நபர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறுவர் இல்லத்தின் பராமரிப்பாளராக கடமையாற்றி வரும் பெண்ணின் கணவரே இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கொஹூவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பத்து வயது முதல் பதினேழு வயது வரையிலான 18 சிறுமிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து தகவல்களை பெற்றுக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவர் இல்லம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் படுக்கை அறைகள் காணப்பட்ட போதிலும் அவற்றை சிறுமிகள் பயன்படுத்த இடமளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுமிகளுக்கு உரிய முறையில் உணவு கூட வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுமிகள் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும் சிறுமிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தின் சாரதியாக சந்தேக நபர் கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
துஸ்பிரயோகத்திற்கு குறித்த நபரின் மனைவி உதவினாரா? சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனரா? என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.