வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியும், ரணிலின் முன்னைய அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ

354

 

வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியும், ரணிலின் முன்னைய அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோவை நியமிப்பது குறித்து புதிய அரசுத் தலைமை பரிசீலித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்தன. இந்தப் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார செயலாளரும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றியவருமான பள்ளியக்கார நியமிக்கப்பட்டுவிட்டார் என சில ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அத்தகைய இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவேயில்லை என அரச உயர் வட்டாரங்கள் ‘மலரும்’ இணையத்துக்குத் தெரிவித்தன. ”

அவரது (பள்ளியக்காரவின்) பெயரும் பரிசீலனையில் இருந்தது. அவ்வாறே அனேகமாக அனைத்து மாகாண ஆளுநர்களுமே பெரும்பாலும் மாற்றப்படுவார்கள் எனத் தெரிகின்றது. வடக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் ஓய்வு பெற்ற படை அதிகாரிகள். அவர்கள் நிச்சயம் மாற்றப்படுவார்கள். அத்தோடு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஓர் அரசியல்வாதி.

அவரும் மாற்றப்படுவார் எனத் தெரிகிறது. அந்த இடங்களுக்குப் பெரும்பாலும் ஓய்வு பெற்ற சிவில் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமையையே புதிய அரசு விரும்புகின்றது. “வடக்கு ஆளுநர் பதவிக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் பெயர் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றது. ஏற்கனவே முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசு விடுதலைப் புலிகளுடன் வெளிநாடுகளில் வைத்து நடத்திய பேச்சுக்கள் பலவற்றில் நேரடியாக அரசுப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் அவர்.

தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டவர். “அத்தோடு அவர் வடக்கு ஆளுநராக நியமிக்கப்படுகின்றமையை வடக்கு மாகாண சபையை நிர்வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும் என அரசு எதிர்பார்க்கின்றது.”- இவ்வாறு அரசின் உயர் வட்டாரங்கள் ‘மலரும்’ இணையத்துக்குத் தெரிவித்தன.

SHARE