பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை நாளை (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்கும் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ், காலி முகத்திடலில் திருப்பலியொன்றை நிறைவேற்றி நாட்டுக்கும், மக்களுக்கும் ஆசி வழங்க உள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திறந்த ரத பவனியாக கொழும்புக்கு வரவுள்ள பரிசுத்த பாப்பரசரை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் மாலை அணிவித்து, பூச்செண்டு வழங்கி வரவேற்பார்.
அத்துடன் இராணுவ மரியாதையும் வழங்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாப்பரசரை வரவேற்று அன்றைய தினம் விசேட உரை நிகழ்த்துவார்.
14ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பாப்பரசர் காலி முகத்திடலில் விசேட திருப்பலி ஆராதனை ஒப்புக் கொடுப்பார். ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் விசேட ஆராதனையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 2.00 மணிக்கு பாப்பரசர் ஹெலிகொப்டர் மூலம் மன்னார் மடு தேவாலயத்துக்கு பயணிப்பார்.
மன்னார் பாப்பரசரை மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வரவேற்று ஆசியுரை வழங்குவார். 15ஆம் திகதி காலை 8.00 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு பிலிப்பைன்ஸ் நோக்கி செல்ல உள்ளதாக ஊடகப் பிரிவின் அத்தியட்சகர் பேராயர் சிறில் காமினி தெரிவித்தார்.