
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் ஆயுதந்தாங்கிய பயங்கரவாதக் குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் தமது உரிமைகளை தொடர்வதற்கு அல்லது தம்மை பாதுகாத்து கொள்வதற்கு இயலாதிருக்கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர்விளைவான கருமங்கள் ஆகியவற்றை இயலச் செய்வதற்குமானதொரு சட்டமூலம் என்று இச் சட்டமூலத்தின் முகப்புரையில் காணப்படுகின்றது.
1983ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரையான நிகழ்வுகள் இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் இதில் உள்வாங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் காணப்படவில்லை.
1983ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற கலவரங்கள் குறித்தவொரு ஆயுதந்தாங்கிய குழுவின் செயற்பாடாக அமைந்திருக்கவில்லை. அவை பரவலாக இடம்பெற்ற சம்பவங்களாகவே காணப்பட்டன.
அந்த வகையில், சட்டமூலத்தின் முகப்புரையின் பிரகாரம் பார்க்கையில் 1983ம் ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமது அசையா சொத்துக்களை இழந்த நபர்கள் இந்த சட்டமூல ஏற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள். அதற்கான ஏற்பாடுகளும் காணப்படவில்லை.
இச் சட்டமூல ஏற்பாடுகளின் பிரகாரம் நபரொருவர் தமது காணி உள்ளிட்ட அசையாச் சொத்துக்களின் உரிமத்தை மீளப்பெற்றுக் கொள்வதன் நிமித்தம் வழக்கு தொடரும் போது, ஆயுதந்தாங்கிய பயங்கரவாத குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாகத்தான் இதற்கு முன்னர் தம்மால் தமது சொத்தின் உரிமத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடாவோ அல்லது தம்மை பாதுகாத்துக் கொள்ளவோ முடியாமல் போனதென எவ்வாறு எப்படி அந்நபரால் உறுதிப்படுத்தவோ அல்லது நிரூபணம் செய்யவோ முடியுமானதாக இருக்கும் என்ற நடைமுறைச் சிக்கலும் காணப்படுகின்றது.
ஆகவே அதனைக் கவனத்தில் கொண்டு குறித்த சட்ட மூலத்தில் ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.