2ஆம் இணைப்புர் – தமிழ் அரசியல் கைதிகளின் முடிவுக்கு வந்தது.

337

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழியை ஏற்று இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் செயற்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனக் கண்டால், தாங்கள் ஏதாவது ஒரு வழியில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்குக் கடிதம் ஒன்றையும் கையளித்திருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

தமிழ் அரசியல் கைதிகள்

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

கனம் ஐயா

உண்ணாவிரத்தை நிறுத்துவது தொடர்பாக

தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது விடுதலையை வலியுறுத்தி, 12.10.2015 அன்று, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். அப்போது 17.10.2015 ஆம் திகதி புதிய மகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக கைதிகளின் விடுதலை தொடர்பாக பொறிமுறை ஒன்று வகுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்ததாக, எம்மிடம் நேரடியாகத் தெரிவித்;தார்.

இதற்கிணங்க நாங்கள் எமது போராட்டத்தைத் தற்காலிகமாக இடை நிறுத்திக் கொண்டோம். அத்துடன் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக, ஆக்கபூர்வமான அதாவது எமக்குத் திருப்தியளிக்கத்தக்க வiயிலான தீர்வு கிடைக்காத பட்சத்தில், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து போராட்டத்தை ஆரம்பிப்போம் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை இரா.சம்பந்தன் அவர்களிடம் கையளித்திருந்தோம்.

நவம்பர் 7 ஆம் திகதி வரை திருப்திகரமான தீர்வு எதுவும் கிடைக்காமையால், நாம் 8 ஆம் திகதி முதல் நாம் எமது போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. நேற்றைய தினம் 16 ஆம் திகதி எமது உண்ணாவிரதப் போராட்டம் 9 ஆவது நாளைப் பூர்த்தி செய்திருந்தது. எம்மில் பலருடைய உடல் நிலை மிக மோசமடைந்திருந்தது.

இந்த நிலையில் புதிய மகசின் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், எம்மை எமது போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியிருந்தார். வடமாகாண சபை உறுப்பினர்களும், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், புலம்பெயர் சமூதாயமும், மக்களும் ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையடையும் வரையில் போராட்டத்தைக் கொண்டு செல்வார்கள் என்று எமக்கு நம்பிக்கையோடு உறுதியளித்தார்.

பின்னதாக அமைச்சர் சுவாமிநாதன் அவர்களோடு, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் புதிய மகசின் சிறைச்சாலைக்கு வருகை தந்து, கைதிகளினால் கோரப்பட்டிருந்த புனர்வாழ்வு பெறுவதற்கான விண்ணப்பத்தை அரசு சாதகமாகப் பரிசீலிப்பதாகவும், முதற் கட்;டமாக (நவம்பர் 16 ஆம் திகதியில் இருந்து) பத்து நாட்களுக்குள் முதல் தொகுதி கைதிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், கைதிகள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் கட்டம் கட்டமாக, முற்றாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோர் கொள்கையளவில் இணங்கியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இச்சூழ்நிலையில் கைதிகளாகிய நாம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக, கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது என உணராத பட்சத்தில், நாம் ஏதாவது ஒரு வழிமுறையில், சாத்வீகப் போhரட்டத்தை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.

இங்ஙனம்

தமிழ் அரசியல் கைதிகள்

 

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது :-
தமிழ் அரசியல் கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்தக் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப்போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்தக் கைதிகள் இன்றைய தினம் தமது போராட்டத்தை கைவிட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் இவ்வாறு போராட்டம் நடத்தி வந்தனர்.
சில கைதிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த உறுதிமொழியின் அடிப்படையில் கைதிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
கடந்த மாதமும் இவ்வாறான ஓர் போராட்டத்தை கைதிகள் மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


முடிவுக்கு வந்தது தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

பொது மன்னிப் அடிப்படையில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த போராட்டத்தை பத்தாவது நாளான இன்று முடிவுக்கு கொண்டு வருவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பில் பிரதமர் அலுவலகத்தில் நடந்த விசேட கூட்டத்தில் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுவிப்பது மற்றும் பிணையில் விடுவிப்பது என்ற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதுவரையில் 39 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் செல்லவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நேற்று கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று அறிவித்தார். இதனை அடுத்து தமது முடிவை இன்று அறிவிப்பதாக கைதிகள் கூறினர்.
இந்த நிலையிலேயே தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இளநீர் கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.
SHARE