தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான இளம்பெண் தற்போது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுத்தொடநல்லூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தலை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் இருந்ததால் அவர் யார் என்றும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் தெரியாமல் பொலிசார் குழம்பி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் கால்வாய் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை பொலிசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், சிறுத்தொடநல்லூரில் நடந்த பெண் கொலைக்கும் இவர்களுக்கும் சம்மந்தமில்லை என தெரியவந்தது.
ஆனால், இதில் முக்கிய திருப்பமாக கால்வாய் கிராமத்தில் தங்களது உறவுக்கார பெண்ணை கொலை செய்து, சடலத்தை அங்குள்ள கிணற்றில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வீசியதாக அவர்கள் தெரிவித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பெயர் வெண்ணிலா (17). வெண்ணிலாவின் தந்தை சுடலைமுத்து அங்குள்ள தும்பு ஆலையில் வேலை செய்து வந்தார்.
அப்போது, அங்கு வேலை பார்த்த இளைஞரை காதலித்து வந்த வெண்ணிலா பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளார்.
அந்த இளைஞர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வெண்ணிலா காதலுக்கு சுடலைமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர், முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி வெண்ணிலாவை, சுடலைமுத்துவின் குடும்பம் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
சில நாட்கள் கழித்து வெண்ணிலாவை காணவில்லை என பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
பொலிசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் தான் வெண்ணிலா கொலை செய்யப்பட்டது, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தெரியவந்துள்ளது.
தற்போது வெண்ணிலா உடல் வீசப்பட்ட கால்வாய் கிராமத்துக்கு அருகேயுள்ள கிணற்றை ஆறுமுகமும், பாலசுப்பிரமணியனும் அடையாளம் காண்பித்தனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வெண்ணிலாவின் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைதான ஆறுமுகம் வெண்ணிலாவின் உறவினர் என கூறியுள்ள பொலிசார், வெண்ணிலா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.