2014 தேர்தல் முடிவுகள்பலருக்குஉவப்பானதாகஇரு
நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. இந்தப் பெயரைக் கேட்டதும் பலர் ஆர்ப்பரிக்கிறார்கள். சிலர் முகம் சுளிகிறார்கள். மோடி வலிமையான தலைவர், அவர் இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வார் என்று பெரும்பாலானோர் உறுதியாக நம்புகிறார்கள். இன்னொருபுறம் அவர் பெயரைக் கேட்டாலே, குஜராத் கலவரம்தானே நினைவுக்கு வருகிறது….. அதற்கு எந்த வகையிலும் நியாயம் கிடைக்காத சூழலில் மோடியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நியாயமான கேள்விகள்தான். குஜராத் கலவரத்தில் இறந்தவர்களை காரில் அடிபடும் நாயோடு ஒப்பிட்டு அதற்காக வருந்தினேன் என்று சொன்னவர்தான் இவர். ஆனாலும் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களே….. !!! இந்தத் தேர்தல் முடிவுகள், அதுவும் பிஜேபிக்கு முழுப் பெரும்பான்மையை அளித்த இந்த முடிவுகள் இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களை கடும் சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பல இடங்களில் புலம்பல் சத்தங்கள் காதைத் துளைக்கும் வண்ணம் கேட்கிறது.
புலம்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாலும் எதற்காக புலம்ப வேண்டும் ? இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியா சந்தித்த மிக மோசமான இருண்டகாலம் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை. அந்த நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் நடைபெற்ற அக்கிரமங்கள் ஷா கமிஷன் அறிக்கையிலும் பல்வேறு நூல்களிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் இருண்ட காலம் அது என்றால் அது மிகையாகாது
இன்ற இருப்பது போல இணையதள வசதியோ, சமூக வலைத்தளங்களோ அன்று இல்லை. ஆனால், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஜனநாயகத்தைக் காப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்தன. அந்த சிறப்பான செயல்பாடுகளின் விளைவே இந்திரா காந்தி சந்தித்த படு தோல்வி. தன்னை வீழ்த்த இந்தியாவில் ஒரு சக்தியே கிடையாது என்று இறுமாந்திருந்த இந்திரா காந்தியையே தோற்கடித்தவர்கள்தான் நம் மக்கள்.
ஆனால் இரண்டு ஆண்டு கால ஜனதா அரசாங்கத்தின் குழப்பங்களாலும், கேலிக் கூத்துக்களாலும் அதே இந்திரா காந்தியை அறுதிப் பெரும்பான்மையோடு அரியணையில் ஏற்றியதும் இதே மக்கள்தான். ஜனதா ஆட்சியின் கேலிக்கூத்துக்களால், இந்திராவே பரவாயில்லை என்று மக்கள் எந்த சூழலில் ஒரு முடிவுக்கு வந்தார்களோ, அந்த சூழலில்தான் இன்று பாரதீய ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திலேயே ஏராளமான ஊழல். விலைவாசி உயர்வு. கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து ஏராளமான சமரசங்கள். 2009 தேர்தலிலேயே தோல்வியை தழுவியிருக்க வேண்டிய காங்கிரஸ் அரசு, முன்னிலும் அதிக எண்ணிக்கையில் 2009ல் வென்றதன் விளைவு, காங்கிரஸ் கட்சி முன்னிலும் அதிக இறுமாப்போடு நடந்துகொண்டது. காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு, என்ன செய்தாலும், நம்மை விட்டால் இந்தியாவை ஆள ஆட்களே கிடையாது என்ற அளவுக்கு ஆணவம் ஏற்பட்டது. 2009 காங்கிஸ் அரசில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல் புகார்கள் மலை போல குவிந்தவண்ணம் இருந்தும், அவற்றை அலட்சியமாக புறந்தள்ளி அப்படி ஒரு ஊழலே நடைபெறவில்லை என்று அவற்றை மறைக்க முயற்சித்ததும், ஊடகங்களின் உதவியால் அவை வெளி வந்ததும், பெயருக்கு ஒரு விசாரணை ஏற்படுத்தி, நாங்கள் யோக்கியர்கள் என்று காண்பித்துக் கொண்டதும், நாடு முழுக்க மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஊழலையும், அகந்தையையும் மறைக்க உதவவில்லை. தலைகால் புரியாத தலைமை. தான்தோன்றித்தனமான அமைச்சர்கள். அடிப்படையே ஆட்டம் கண்ட கட்சி நிர்வாகம். அத்தகைய மோசமான பின்னணியில், மதவாதம் என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து, மீண்டும் அரியணையில் ஏறலாம் என்ற கனவில் காங்கிரஸ் மிதந்து வந்தது. அந்த அகந்தைக்கும் ஆணவத்துக்கும் கிடைத்த பரிசே வெறும் 44 இடங்கள்.
காங்கிரஸ் எதிர்ப்பு அலை எந்த அளவுக்கு வீசியதென்றால், உத்தரப்பிரதேசத்தில் தலித்துக்கள் கூட மாயாவதியை கை விட்டு, பிஜேபியை தேர்ந்தெடுத்தார்கள். பகுஜன் சமாஜ் தலித்துக்களுக்கான கட்சியென்றாலும் ஜாதவ் என்ற பிரிவினரே அதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மற்ற உட்பிரிவினரும் பொதுவாக மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், இத் தேர்தல்களில் முஸ்லீம்களுக்கெதிராய் திரும்பி பாஜகவை ஆதரிக்க முன்வந்தனர். முஸாபர் நகர் கலவரம் ஏற்கெனவே அங்கிருந்த மதப் பிளவை இன்னமும் உக்கிரமாக்கியிருந்ததுது. எப்போதுமே இந்து-முஸ்லீம் மதக் கலவரத்தால் பயனடைவது பாஜகதானே.
இந்நிலையில் அகிலேஷ் யாதவ் அரசு கையாண்ட விதம் காரணமாக முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் வெறுத்துப், போயிருந்தனர். பொதுவாகவே சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருந்த சூழலில் சமாஜ்வாடிக் கட்சியும் பரவலாக நிராகரிக்கப்பட்டது. எழுபதிற்கும் அதிகமான இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.
இச்சூழலில் மோடிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மை மக்கள், இஸ்லாமியர்களை வெறுப்பவர்களோ, பாகிஸ்தானோடு போருக்கு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களோ அல்ல என்பதை உணரவேண்டும். இத்தனை இறுமாப்பாக ஒரு கட்சி ஆட்சி நடத்துகிறதென்றால், அதற்கு பதிலடி அளித்தே தீர வேண்டும் என்று ஆத்திரத்தில் வாக்களித்தவர்களே அதிகம். குஜராத் கலவரத்திலும், குஜராத் மாநிலத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்ட்டர்களிலும் மோடிக்கு பெரும் பங்கிருப்பதை தீவிர இந்துத்துவா வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் மற்றபடி என்ன நடந்ததென்பது பொதுவாக அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல், காங்கிரஸ் ஒழிந்தால் போதும். மோடி வரட்டும், என்னதான் நடந்துவிடும் பார்க்கலாமே என்ற மன நிலையில்தான் அமோகமாக மோடிக்கு வாக்களித்திருக்கின்றனர்.
சரி, மோடி எப்படி இருப்பார் ? தீவிர இந்துத்துவா திட்டத்தை செயல்படுத்துவாரா ? ராமர் கோவிலை கட்டுவாரா ? அரசியல் சட்ட அமைப்புப் பிரிவு 370ஐ நீக்குவாரா, இஸ்லாமியர்களை ஒடுக்குவாரா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் இஸ்லாமிய மக்களையும், முற்போக்காளர்களையும் வாட்டி எடுக்கின்றன. அவற்றுக்கெல்லாம் காலம்தான் விடை சொல்ல வேண்டும் என்றாலும், மோடியின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கையில், இந்துத்துவா, இஸ்லாமிய எதிர்ப்பு கோஷம் போன்றவற்றை தன்னுடைய வளர்ச்சிக்காகவே அவர் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது புலனாகும். தற்போது, மோடிக்கு தான் ஒரு சிறந்த பிரதமர், மன்மோகனை விட சிறந்தவர், என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் முன்பாகவும், மோடி தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்று பறைசாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் போல, அவரால் வெற்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்க முடியாது. உருப்படியாக எதையாவது சாதித்துக்காட்டவேண்டும், கலவர நாயகன் என்ற அவப்பெயரிலிருந்து மீளவேண்டும். எனவே எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டாலுங்கூட, அந்த மிருக பலத்தை, இந்துத்துவா அஜெண்டாவை முன்னெடுக்க அவர் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவே.
அப்படியே ஒரு நெருக்கடி வந்தே தீரும் என்றாலும் அதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, வலிமை பெற்றதுதான் இந்தியா.
இடதுசாரிகள்
காங்கிரஸ் கட்சியைப் போலவே மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளனர் இடதுசாரிகள். தேசிய கட்சி என்ற அடையாளத்தை இழக்கும் அளவுக்கு தோல்வி. ஒரு மாபெரும் இயக்கத்தின் இந்த வீழ்ச்சி, மனவேதனையைத்தான் தருகிறது. ஆனால், இந்த வீழ்ச்சிக்கு தங்களைத் தவிர அவர்கள் வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் 25 ஆண்டு கால ஆட்சி அவர்களின் மீது தீராத வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் இருந்த அவர்கள், கிட்டத்தட்ட முலாயம் சிங் யாதவின் காட்டாட்சி போல நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறார்கள். நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியிருந்தது என்றாலும், சிபிஎம் தொண்டர்களின் குண்டர்கள் ராஜ்ஜியமும், சிங்கூர் மற்றும் நந்திகிராமில் அக்கட்சி மக்களை நடத்திய விதமும் மக்கள் மனதில் மாறாத வடுவாக பதிந்துள்ளது. எனவே ,மேற்குவங்கத்தில் பெரும் தோல்வி. கேரளாவில் பினரயி விஜயன் இயன்ற அளவு கம்யூனிசத்தின் பெயரையே கெடுத்திருக்கிறார்.
அதே நேரம் இடதுசாரிகளின் வளர்ச்சியே ஒடுக்குமுறையின் எதிர்விளைவாகத்தான். எனவே வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ள இந்த சூழல், இடதுசாரிகள் இழந்த தங்களின் வேர்களை மீட்டெடுக்க ஒரு அற்புதமான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சி எப்படி ஒரு குடும்பத்தை நம்பி அதன் முடிவுகளை கட்சியின் மீது திணிக்கிறதோ, கிட்டத்தட்ட சிபிஎம்மின் பொலிட் பீரோ அதே வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது சோனியாவும் ராகுலும் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன்வருவார்கள். ஆனால் சிபிஎம்மில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பிரகாஷ் கராத் ராஜினாமா செய்வது என்ற பேச்சே எழாதது, அவர்கள் இன்னும் மீளா உறக்கத்தில் இருப்பதையே இது காட்டுகிறது.
ஆம் ஆத்மி கட்சி
இந்தியாவில் இடதுசாரிகள் ஏற்படுத்திய ஒரு காலியிடத்தை ஆம் ஆத்மி பயன்படுத்திக் கொண்டுவருகிறது. இந்தக் கட்சியின் தொடக்கம் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. காங்கிரஸ் மற்றும் பிஜேபிக்கு மாற்றாக அது அமையக்கூடும் என நம்பியே டில்லி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். படு தோல்வியடைந்த காங்கிரசும் பாஜகவுக்குச் செக் வைப்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவளித்தது. ஆனால் ஆம் ஆத்மியினர் அந்த வாய்ப்பை ஒரேயடியாக உழப்பி, தடாலடியாக ராஜினாமா செய்து தங்கள் செல்வாக்கினை வளர்க்கலாம் என்று தவறாகக் கணித்து தலை குப்புற விழுந்துவிட்டனர். எந்த டில்லி மாநகரில் புதிய நாயகர்களாக வலம் வந்தனரோ அதே டில்லியில் ஒரு தொகுதியைக் கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
போதாக்குறைக்கு டில்லி வெற்றியில் மயங்கி, தங்களது உண்மையான வலிமையை உணராமல், கட்சி அமைப்பே பல மாநிலங்களில் இல்லாத நிலையிலும், நாடெங்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார்கள். ஆனால் டில்லி அனுபவமோ வாக்காளர் பலரைக் கசந்துபோக வைத்திருந்தது தவிரவும் பல்வேறு இடங்களில் தேர்தல் செலவுக்கு சுத்தமாக பணம் இல்லாமல்தான் இக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இறுதியில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர அவர்களால் வேறெங்கும் வெற்றி பெறமுடியவில்லை
ஆனாலும் ஆம் ஆத்மியினர் மனம் தளரவேண்டிய அவசியமில்லை. இன்று ஆட்சியை பிடித்திருக்கும் பாஜக 1984ல் இந்திரா கொல்லப்பட்டபின் எழுந்த அனுதாப அலையில் அடித்துச் செல்லப்பட்டு வெறும் 2 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் சரியான தந்திரோபாயங்களினால் இன்று நாட்டை ஆளும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது என்பதை ஆம் ஆத்மி கட்சி நினைவில் கொள்ள வேண்டும். பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பண பலம் மற்றும் தொண்டர் பலத்தை அது நெருங்கக் கூட முடியாது. இருந்தும், பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சிக்கு 3 எம்.பிக்கள் கிடைத்துள்ளது பாராட்டத்தகுந்த விஷயம். கட்சியை பலப்படுத்தி, கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான தங்கள் போரை, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
தமிழகம்
ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கி உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தமிழகத்தில் சென்னை நீங்கலான பிற மாவட்டங்களில் மின்வெட்டு கடுமையாக இருந்தது. கோடைக்காலத்தில் மின்வெட்டு, மக்களை கடுமையான கோபத்துக்கு ஆளாக்கும். இந்த மின்வெட்டுப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததால்தான், ஜெயலலிதா, மின்வெட்டுக்கு காரணம் சதித்திட்டம் என்று பேசத் தொடங்கினார். அதிமுகவின் ஹெலிகாப்டர் பிரச்சாரத்தை ஒப்பிடுகையில், திமுகவின் அமைப்பு பலம் காரணமாக, பிரச்சாரம் மிக மிக சிறப்பாகவே செய்யப்பட்டது. திமுக தொண்டர்கள், மற்றும் பொருளாளர் ஸ்டாலின் தமிழகமெங்கும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கினர்.
இந்தத் தேர்தல்தான் முதன் முறையாக பெரும்பாலான கட்சிகள் கூட்டணி பலமின்றி தனித்து தேர்தலை சந்தித்தன.
ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறமுடியாமல் வரலாறு காணாத தோல்வியை திமுக சந்தித்திருக்கிறது, இம்முடிவுகள் திமுக மீதான மக்களின் கோபம் சற்றும் தணியவில்லை என்பதையே காட்டுகின்றன. கனிமொழியின் எம்.பி பதவிக்காக காங்கிரஸோடு சரசமாடிவிட்டு, இறுதி நேரத்தில் காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது என்று குற்றஞ்சாட்டியதை மக்கள் சற்றும் ரசிக்கவில்லை. 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட ராசா, மாறன் போன்றோருக்கு சீட் அளித்ததும், ராசா நான் ஒரு புரட்சியாளன் என்று பேசியதையும் மக்கள் முகச்சுளிப்போடே பார்த்தார்கள். மாபெரும் ஊழல் செய்த திமுக, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசியது சற்றும் எடுபடவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீது கடும்கோபத்தோடு எப்படி வாக்களித்தார்களோ, அதே கோபத்தோடுதான் தற்போதும் வாக்களித்துள்ளார்கள். ஈழப்போரின் போது காங்கிரஸ் கட்சியை முட்டுக் கொடுத்து தாங்கிப்பிடித்து விட்டு, கூட்டணியை விட்டு விலகியதும் டெசோ மாநாடு போடுவது, திருப்புமுனை மாநாடு போடுவதையெல்லாம் மக்களுக்கு எரிச்சலையே ஊட்டியது.
கட்சியில் தன்னை விட வேறு யாருமே வளர்ந்துவிடக் கூடாது, அது தன் சகோதரனாக இருந்தாலும் சரி, சகோதரியாக இருந்தாலும் சரி என்று, வேட்பாளர் தேர்வு முதல் பிரச்சாரம் வரை, அனைத்தையும் கையில் எடுத்த ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியே இது. கருணாநிதியைக் கூட வேட்பாளர் தேர்வில் தலையிட விடாமல், அனைத்து வேட்பாளர்களையும் ஸ்டாலினே தேர்ந்தெடுத்தார். கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்குக் கூட, இரண்டு சீட் ஒதுக்க மனமில்லாமல் இருந்தார். இந்தத் தோல்வி ஸ்டாலினுக்கு பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், பத்திரிக்கையாளர்களை ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்கியது, அவர் ஒரு நாளும் கற்றுக் கொள்ள மாட்டார் என்பதையே காட்டுகிறது.
அஇ அதிமுகவைப் பொறுத்தவரை, முதலில் பிரதமர் கனவோடே பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா நாளடைவில், தன் பிரச்சாரத் தொனியை மாற்றிக் கொண்டு பேசினார். மத்தியில் அமையப்போகும் ஆட்சியில் அதிமுக வலுவான பங்கு வகிக்கும் என்றும், தமிழக உரிமைகளை மீட்கும் என்றும் ஜெயலலிதா செய்த பிரச்சாரம் மக்களிடையே எடுபடவே செய்தது. இந்தியாவெங்கும் மோடி அலை ஆனால் தமிழகத்திலோ அவரது பெயருக்கு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக மவுசு. தவிரவும் இன்றளவும் பாஜக வடக்கத்திக்காரர்கள் கட்சி என்றே பார்க்கப்படுகிறது. திமுக மீதான கோபமும் தணியவில்லை. மின்வெட்டும் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இப்பின்னணியிலேயே தமிழக மக்கள், ஜெயலலிதா நாளை கூட்டணி அமைச்சரவையில் பங்கெடுப்பார் என நம்பி அவருக்கு பெரும் ஆதரவளித்தனர்.
ஆனால் பல்வேறு சிக்கல்களின் காரணமாக மிகப் பலவீனமடைந்திருந்த திமுக எனும் ஒரு நோஞ்சானோடு போட்டியிட்டு கிடைத்த வெற்றி இது என்பதை புரட்சித் தலைவியார் மறந்து விடக்கூடாது.
இன்று வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் இவருக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றி காரணமாக, மக்கள் ஜெயலலிதா ஆட்சியின் தவறுகளை மறந்துவிட்டார்கள் என்று பொருளல்ல. இதை மனதில் வைத்து ஜெயலலிதா ஆட்சி நடத்த வேண்டும்.
எதிர்பாராத முடிவுகளை இந்தத் தேர்தல் வழங்கியுள்ளது. நாம் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.
-சவுக்கு-