
சினிமா பிரபலங்கள்
2020 ஆம் ஆண்டு கொரோனாவால் திரையுலகமே முடங்கி இருந்தாலும், சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துக்கொண்டே தான் இருந்தது. அதன் தொகுப்பை தற்போது காணலாம்.

ஜனவரி மாதம் 14-ந் தேதி நடந்த துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால் ரஜினி, நான் நடந்ததை தான் சொன்னேன், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
விஜய் வீட்டில் ரெய்டு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமானவரித் துறையினர் அங்கிருந்து விஜய்யை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியன் 2 விபத்து
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிப்ரவரி மாதம் நடந்தபோது கிரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இது திரையுலகினரை உலுக்கியது.

திரெளபதிக்கு எதிர்ப்பு
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர்கள் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வெளியான படம் திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதில் இடம்பெற்ற வசனங்கள் வன்முறையை தூண்டுவிதமாக இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது.

ஜோதிகா சர்ச்சை பேச்சு
படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்ற நடிகை ஜோதிகா, அங்குள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜோதிகா, கோயிலுக்கு செலவு செய்து பராமரிப்பது போல, மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் எனவும், கோயிலின் உண்டியலில் போடும் பணத்தை பள்ளிகள் மருத்துவமனைகளுக்கு கொடுக்கலாம் என்றும் பேசியிருந்தார்.

ஓடிடி ரிலீஸ் சர்ச்சை
கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தாலும், இதற்கு ஆதரவு கருத்துகளும் வந்தன.

வனிதா திருமணம்
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி 3-வது திருமணம் செய்துகொண்டார். இது பெரும் சர்ச்சையானது. பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவரை வனிதா பிரித்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத பீட்டர் பாலை வனிதா மணந்தது தவறு என கண்டித்தனர்.

விஜய் சேதுபதியின் ‘800’
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு முத்தையா முரளிதரன் ஆதரவாக குரல் கொடுத்தவர் என்பதால், விஜய் சேதுபதி அந்தப் படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

ஸ்நேக் சர்ச்சையில் சிக்கிய சிம்பு
சர்ச்சைகளுக்கு பெயர்போன சிம்பு இந்தாண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவர் லாக்டவுனில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் சிம்பு பாம்பு ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் பாம்பை கொடுமைப்படுத்தியதாகவும், வன உயிரின சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் படப்பிடிப்பில் உபயோகிக்கப்பட்டது பிளாஸ்டிக் பாம்பு என்றும் அது கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.
சித்ரா தற்கொலை
சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இந்தச் சம்பவத்தில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அவரின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டது. அதில் சித்ராவின் பெற்றோர், உறவினர்கள், உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், ஹேம்நாத்தின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இளையராஜாவும்…. பிரசாத் ஸ்டூடியோவும்
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் 5 அறைகளை இளையராஜா தனது இசைப் பயணத்திற்காக பயன்படுத்தி வந்தார். பல்வேறு பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் தங்கள் பாடல்களை பாடி இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் இசைப் பயணத்தில் பிரசாத் ஸ்டூடியோ மிகவும் முக்கியமானதாகவே இருந்து வந்தது.
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். இதனையடுத்து அங்குள்ள தனக்குரித்தான பொருட்களை எடுக்கவும், அங்கு ஒரு நாள் தியானம் செய்யவும் நீதிமன்றத்தில் இளையராஜா அனுமதி கோரிய இருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஒரு குடோனில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளையராஜா தனது வருகையை ரத்து செய்தார். இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்களில் பத்திரமாக அடுக்கப்பட்டது. பின்னர் அந்த பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.
அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி
நடிகர் ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான பணியை மேற்கொண்டு வந்தார். டிச.31-ந் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். இதனிடையே அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த டிச.14-ந் தேதி ஐதராபாத் சென்றிருந்தார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜினிகாந்த் இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பிய அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.