ஸ்பெயினில் நடந்த பாரம்பரியான காளை அடக்கும் போட்டியின்போது ஒரு இளம் வீரர் மாடு முட்டித் தூக்கிப் போட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். 21வது நூற்றாண்டில் இதுபோல உயிர்ப்பலி ஏற்படுவது இதுதான் முதல் முறையாகும். விக்டர் பாரியோ என்ற 29 வயது வீரரின் மார்பில் முட்டிக் கிழித்த அந்த காளை அவரைத் தூக்கி வீசியது.
படுகாயமடைந்த நிலையில் இருந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பாரியோ பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்பெயின் நாட்டின் தெரியல் என்ற நகரில்தான் இந்த காளைச் சண்டைப் போட்டி நடந்தது.
வருடா வருடம் நடக்கும் பெரியா டெல் ஏஞ்செல் என்ற திருவிழாவின் ஒரு பகுதியாக காளைச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நடந்தபோது பாரியோவின் மனைவியும் காலரியில் அமர்ந்து அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 21வது நூற்றாண்டு பிறந்தது முதல் இதுவரை எந்த உயிர்ப்பலியும் ஏற்படாமல் இருந்தது.
தற்போது முதல் உயிர்ப்பலி ஏற்பட்டது. இதற்கு முன்பு 80களில் நடந்த போட்டிகளின்போது 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பிரபலமான காளை பிடி வீரர் பிரான்சிஸ்கோ ரிவேராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 1992ம் ஆண்டு இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். செகோவியா நகரில் பிறந்தவர் பாரியோ. மாட்ரிட் அருகே இந்த நகரம் உள்ளது.
கோல்ப் கிளப் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். நீண்ட காலமாகவே காளை பிடி வீரராக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதற்காக பயிற்சி பெற்று வீரராக மாறினார். 2012ம் ஆண்டு முதல் இவர் முழுமையான காளைச் சண்டை வீரராக மாறி காளைகளை அடக்கி வந்தார்.
நம்ம ஊரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் இந்த காளைச் சண்டைக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. நமது ஊரில் துள்ளி வரும் காளைகளை எதிர்கொண்ட அடக்குவார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை. இது சற்று மாறுபட்ட வீர விளையாட்டாகும்.