யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினமும் இணைந்து நடத்திய நாடகம்.

522

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையில் அனைத்துப் பீட பீடாதிபதிகளும் மாணவ ஆலோசர்களும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலரும் நேற்று (07.05.14) யாழ் இராணுவத் தரப்பை சந்தித்துள்ளதாக  தெரியவருகிறது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாட்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நினைவுகூரப்படுகிறது. யாழ் பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதனை தடுக்கவே பல்கலைக்கழக நிர்வாகத்தால் மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதுடன் இராணுவத்தரப்பால் கொலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுகளின் பின்னர் இராணுவத்தரப்பு சந்திப்பொன்றை நடத்த அழைப்பதாக  துணைவேந்தர் பீடாதிபதிகளுக்குத் தெரிவித்துள்ளார். முதலில் சந்திப்பதை மறுத்த பீடாதிபதிகள் பலாலியில் சென்று சந்திக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
பொது இடமொன்றில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தனர். இராணுவத்தரப்போடு ஏன் சந்திப்பை நடத்த வேண்டும் என்று பீடாதிபதிகள் பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் யாவரையும் இணங்க வைத்த துணைவேந்தர் இராணுவத்தரப்போடு சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். குறித்த சந்திப்பில் யாழ் இராணுவத்தளபதி உதயப்பெரேரா உள்ளிட்ட இராணுவத்தரப்பு கலந்து கொண்டது.
மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பிலேயே சந்திப்பில் பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக பீடாதிபதி ஒருவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பை ஏற்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூறருவதை தடுப்பதே திட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பல்கலைகக்கழக கட்டாய விடுமுறை – எச்சரிக்கை சுவரொட்டி முதலியவை யாழ் இராணுவத்தளபதி உதயப்பெரேராவும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினமும் இணைந்து நடத்திய நாடகம் என்றே கூறப்படுகிறது.
SHARE