துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!

556

 

1510399_1720383434853441_7979554750689710030_n

IMG_0046

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது.

தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு ஆட்டிப்படைக்கலாம் என்றும் கனவு கண்டு தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட சிறீலங்கா இன்று என்னசெய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தமிழர் ஆதரவு அலையே சிறீலங்காவின் இந்த அச்சத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற சில துரோகத்தனமான அரசியல் செயற்பாடுகளானவை தாயகத்திலுள்ள தமிழ் மக்களை மிகவும் கவலையடையச் செய்துவருகின்றது. காலம்காலமாக அடிபட்ட இனமாக வாழ்ந்து வந்த தமிழினத்தின் துயர் களைய வல்வை மண்ணில் உதித்த மைந்தன் எங்கள் தானைத் தலைவன் பிரபாகரனுக்கு முன்னால் தனது வீரத்தைக் காட்ட முடியாத சிங்கள அரச வர்க்கம், இன்று அப்பாவித் தமிழ் மக்களை அடக்கியாள முற்பட்டிருக்கின்றது.

பிரபாகரன் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்ற எண்ணம் சில சிங்கள ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளமையே இந்த மமதைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் படை நடத்திய தளபதிகளுக்கும் அவர்களின் கட்டளைகளுக்கு அமைவாகத் களமாடிய வேங்கைகளுக்கும் அவர்களுக்குப் பக்கபலமாக நின்ற மக்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் முப்பது வருடங்கள் திண்டாடிய சிங்கள ஏகாதிபத்தியம், அனைத்துலகையும் ஏமாற்றி தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பெற்று வந்து எமது மக்களின் தலையின் மேல் கொட்டி வன்னியைச் சுடுகாடாக்கியுள்ளது.

1510399_1720383434853441_7979554750689710030_n

இந்த நிலையிலிருந்து எமது மக்களை மீட்கவேண்டியவர்களே இன்று தமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி முரண்பட்டு நிற்கின்றமை வெட்கக்கேடானது. தமிழீழத் தேசியத் தலைவர் இந்த உலகத்தில் இல்லையென்ற சிலரின் அசட்டு நம்பிக்கையே இவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

தலைவர் இல்லை என்ற மமதை சிங்களத் தரப்பினருக்கு ஏற்பட்டால் அதுதொடர்பில் நாம் அலட்ட வேண்டியதில்லை. ஏனெனில், சிங்களவர்களின் பார்வையில் தேசியத் தலைவர் எத்தனையோ தடவைகள் இறந்துவிட்டார். ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள சில தமிழ்ப் பிரகிருதிகளிடமும் மமதை ஏற்பட்டிருக்கின்றமை இந்த உலகிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விசனத்திற்கு காரணமாக இருக்கின்றது.

இங்கே ஈழத்தில் நாங்கள் படுகின்ற இன்னல்கள் புரியாமல் எங்களை வைத்து, எமது தலைவராலும் போராளிகளாலும் முப்பது வருடம் நேர்மையாக வளர்க்கப்பட்ட போராட்டத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு புலம்பெயர் நாடுகளிலுள்ள சில தரப்புகள் முற்பட்டு வருகின்றன. இந்த துரோகிகள் இன்று ஈழத் தமிழர்கள் முன்பு அடையாளப்படுத்தப்பட்டுள்னர்.

உலகம் இன்று எமக்காக வாதாடிக்கொண்டிருக்கையில் நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் சிங்களவர்களிடம் சுயநிர்ணயம் கேட்டுப் போராடுகின்ற நாங்கள், மறுபக்கம் எங்களைச் சுய விமர்சனம் செய்ய வேண்டியவர்களாக மாறியிருக்கின்றோம். எதையுமே தொடர்ந்து மூடி வைக்க முடியாது. போராட்டத்தின் பெயரால், தமிழீழத் தாயகத்தின் பெயரால், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால், போராளிகளாகக் களமாடி இன்று முன்னாள் போராளிகளாக இருக்கின்றவர்கள் என்ற பெயரால் நாங்கள் இன்று தாயகத்தில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற போது, எங்களின் பெயரால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறுகின்ற சில அருவருக்கத்தக்க செயல்களை நாம் மக்களுக்கு அப்பட்டமாக வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள எமது தாயக தேசத்து உறவுகளே, அங்கே நடைபெறுகின்ற சில சம்பவங்கள் குறித்து தாயகத்திலுள்ள நாங்கள் எமது கவலைகளை வெளிப்படுத்துகின்றோம். கடந்த முப்பது வருட காலமாக போராடி மடிந்த மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி எமது தமிழீழம் என்ற இலட்சியத்திற்கு மாறாக சில துரோகிகள் அங்கே பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, ஈழத்தில் தனது கால்பதித்து மக்களின் நன்மதிப்பை பெறத் துடிக்கின்ற கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் கூட்டத்தைப் போன்று மேலும் சில தேச விரோதிகள் (நாம் இப்போதைக்கு பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை) இங்கே மகிந்த ராஜபக்சவிடம் பணம்பெற்றுவிட்டு, கோத்தபாய ராஜபக்சவுடன் உறவாடிக்கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற எமது இலட்சிய நெறியில் வாழும் மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கட்டப்பட்ட மாவீரர்களின் கல்லறைகளை இடித்தழிப்பது, தேசியக் கொடி, தேசிய இலட்சினை போன்றவற்றை அவமதிப்பது, மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது, மாவீரர்களின் பெற்றோரிடம் பிரிவினையை ஏற்படுத்துவது, இவற்றினூடாக புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து புலிகளைப் பிரித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதுதான் இவர்களின் தலையாய கடமை.

இதனைச் செயற்படுத்துவதற்கென புலம்பெயர்ந்த நாடுகளில் நடமாடுகின்ற நபர்கள் அனைவரும் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்பட்டு வருகின்றனர்.

அன்பிற்குரிய புலம்பெயர் உறவுகளே,

தமிழீழ விடுதலைப் போராட்டம் இப்போதைக்கு தாயகத்தில் இல்லை. தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலேயே இப்போது போராட்டம் நடைபெறுகின்றது. சிறீலங்கா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலேயே தோற்றம் பெற்று இன்று வரை வளர்ந்து புரையோடிப்போயுள்ள ஈழத் தமிழரின் பிரச்சினைகளுக்கு இலங்கைத் தீவிற்குள் தீர்வு காண முடியாதென்பதை 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையிலேயே தமிழீழ தேசியத் தலைவர் தெளிவாகக் கூறிவிட்டார்.

போராட்டம் இப்போது தலைவரால் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதனை வளர்த்தெடுத்து எமது இலட்சியத்தை வென்றெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்கள் கைகளிலேயே இருக்கின்றது.

இந்த நிலையில், உங்களை தவறாக வழிநடத்தி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இல்லாதொழித்து மகிந்த குடும்பத்திடம் நற்பெயர் பெறக் காத்திருக்கும் துரோகிகள் தொடர்பாக நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் வேறு யாருமல்ல. எங்களுடன் உறவாடி உண்டு மகிழ்ந்த சில தமிழர்களே இந்த நாசகார வேலைகளைச் செய்துவருகின்றனர்.

இன்னொரு விடயத்தையும் நாங்கள் மனங்களில் பதிக்க வேண்டும். பிரிவுகள் மூலம் நாங்கள் எதையும் சாதித்துவிடப் போவதில்லை. எங்களுக்குள் ஏற்படுகின்ற பிரிவுகள் காலப்போக்கில் எங்களையே அழிக்க வல்லது. பிரிவுகளும் காட்டிக்கொடுப்புகளும் ஒருபோதும் நிலைக்காது. எமது போராட்டத்தை அழிக்கவெனப் புறப்பட்டு காக்கைவன்னியர்களாக மாறிய சிலர் இன்று கானல் நீராக கரைந்து போய்விட்டனர்.

ஆனால், எமது போராட்டம் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறது. நாங்கள் ஒரேயரு தலைமையின் கீழேயே செயற்பட்டவர்கள். எமக்கு தமிழீழ தேசியத் தலைவர்தான் உயரிய தலைவர். அவரின் நெறிமுறையில் ஒழுகுபவர்கள் எப்போதும், எங்கேயும் விலைபோக மாட்டார்கள். எமது இனத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். கயமைத்தனம் செய்ய மாட்டார்கள்.

ஆனால், இன்று புலம்பெயர்ந்த தேசத்தில் இவ்வாறான சில நயவஞ்சகர்கள் இருந்து எமது போராட்டத்தை அழிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கே தாயகத்தில் தினந்தோறும் எதிரி நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றான். தமிழர் தாயகப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது. எமது இளம் பெண்களும் ஆண்களும் திட்டமிடப்பட்ட கலாசாரச் சீரழிவுகளுக்குள் தள்ளப்படுகின்றனர்.

காலம் காலமாக உயரிய கலை, கலாசார, பண்பாடுகளுடன் திகழ்ந்த தமிழினத்தின் அடிக்கட்டுமானங்களைச் சிதைப்பதற்கு எதிரியானவன் கங்கணம் கட்டி நிற்கின்றான். இதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல், மீட்பர் இல்லாமல் நாங்கள் தவிக்கின்றோம். புலம்பெயர் தமிழ் மக்களே எமது இலட்சியத்தை வென்றெடுத்து தரவேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்தவண்ணமிருக்கின்றோம்.

இந்த நிலையில் எமக்கும், எமது போராட்டத்திற்கும் எதிராகச் செயற்படுகின்ற துரோகிகளின் செயல் குறித்து நாங்கள் கவலையடைகின்றோம். புலம்பெயர் தேசத்தில் தமிழின விடுதலைக்கு எதிராகச் செயற்படுகின்ற துரோகிகளே, தாயகத்திலிருந்து சொல்லிவைக்க விரும்புகின்றோம். தமிழீழ தேசியத் தலைவர் உங்களைப் போன்ற துரோகிகளின் வயிற்றுப் பிழைப்புக்காக போராட்டத்தை தொடங்கவில்லை. தமிழரின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தமிழீழமே ஒரே தீர்வென்ற தாற்பரியத்துடனேயே தலைவர் போராட்டத்தை வழிநடத்தினார்.

தலைவரை நம்பியே தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்தனர். பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களை நீங்கள் கொச்சைப்படுத்தாதீர்கள். முடிந்தால் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற தமிழீழ ஆதரவாளர்கள், எழுச்சியாளர்கள், நாட்டுப்பற்றாளர்களுடன் ஒன்றாக இணைந்து செயற்படுங்கள். ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே சிறீலங்கா அரசாங்கம் எமக்கெதிராக பின்னிவருகின்ற வலையிலிருந்து நாங்கள் எமது இனத்தைக் காப்பாற்றலாம்.

எனவே, உங்களுக்குள் இருக்கின்ற குரோதங்களை இல்லாதொழியுங்கள். தமிழீழ தேசியத் தலைவரின் கட்டளைப்படி, அவரின் வழிகாட்டலின் படி செயற்படுங்கள். மாவீரர்களின் இலட்சியக் கனவுகளை மதியுங்கள். தமிழீழத்தின் பெயராலும் போராட்டத்தின் பெயராலும் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் தமிழீழத்திற்கே சொந்தம்.

எமது மக்களின் தலைமையில் ஒரு தன்னாட்சி அதிகாரம் அமையும்போது நாங்கள் தாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும். எனவே, போராட்டத்தின் பெயரால் பெறப்பட்ட சொத்துக்களை பாதுகாருங்கள். நாங்கள் சுதந்திரத்துக்காக போராடிய, போராடுகின்ற இனம். பிரிவினைகளுக்கும் துரோகத்தனங்களுக்கும் இங்கு இடமில்லை. தாயகத்தில் நாங்கள் படுகின்ற துன்பங்களை நினைத்தாவது புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள துரோகிகள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இத்தகைய துரோகத்தனத்துக்கு துணைபோகக்கூடாது. துரோகிகள் விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். எமது இலட்சியம் தமிழீழம். அதை அடைவதற்கு யார் குறுக்கே நின்றாலும் அவர்களைப் புறம்தள்ளிவிட்டு முன்னேறுவோம்.

SHARE