24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற யாழ்தேவி ரயில் வெள்ளோட்டத்தை ரயில்பாதை நெடுக்கும் மக்கள் நின்று பார்வையிட்டதையும் காணமுடிந்தது. அத்துடன் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தில் 500க்கும் அதிகமான பொதுமக்கள் யாழ்தேவியை வரவேற்க மணிக்கணக்காகக் காத்து நின்றனர்