643
வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 12-ந் திகதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 9-வது இறுதிக்கட்டமாக நாளை 3 மாநிலங்களில் உள்ள 41 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது உத்தர பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 17 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 41 தொகுதிகளிலும் மொத்தம் 606 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 119 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 171 பேர் கோடீசுவர வேட்பாளர்கள் ஆவார்கள்.

இந்த தொகுதிகளில் சுமார் 6 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட இருக்கிறார்கள்.

நாளை தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறிப்பிடத்தக்கவர் ஆவார். மோடி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடியின் தலைவருமான முலாயம் சிங் (ஆசம்கார்), காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஆர்.பி.என்.சிங் (குஷிநகர்), போஜ்புரி நடிகர் ரவி கிஷண் (ஜான்பூர்), பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான யோகி ஆதித்யநாத் (கோரக்பூர்), திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி தினேஷ் திரிவேதி (பாரக்பூர்) ஆகியோரும் நாளை தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள்.

41 தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்தனர்.

நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசிக்கு சென்றுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர்களும், நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவருக்கு ஆதரவு திரட்டி வந்தனர். அவர்கள் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து, அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று திறந்த ஜீப்பில் வாரணாசி நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

இதேபோல் அந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் கைலாஷ் சாராசியாவுக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் வாரணாசி நகரில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

முலாயம் சிங் தான் போட்டியிடும் ஆசம்கார் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

41 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து உள்ளது. வாரணாசி தொகுதியில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்கு வாக்குப்பதிவுக்கு ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரை நடைபெற்று முடிந்த 8 கட்ட தேர்தல்களிலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனவே நாளை நடைபெறும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவையும் அமைதியாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. பதற்றம் காணப்படும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாரணாசி தொகுதியில் சுமார் 20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் ஏற்கனவே 5 கட்டங்களாக 62 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

அங்கு இறுதிக்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறும் மீதம் உள்ள 18 தொகுதிகளும் பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் அமைந்து உள்ளன. இந்த 14 மாவட்டங்களில் சோனேபத்ரா, சந்தவுலி, மிர்சாபூர் ஆகிய 3 மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளதால், அங்கு பாதுகாப்பு பணிக்கு 400 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

நாளை நடைபெறும் வாக்குப்பதிவுடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது.

9 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வருகிற 16-ந் திகதி (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று மாலைக்குள் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.

SHARE