25வது தியாகிகள் தினத்தில் கலந்துகொள்ளுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும் தியாகிகள் தின நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச் செயற்படுபவருமான தமிழ்மணி மேழிக்குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

538

 

25வது தியாகிகள் தினத்தில் கலந்துகொள்ளுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும் தியாகிகள் தின நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச் செயற்படுபவருமான தமிழ்மணி மேழிக்குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
unnamed (1)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் அதன் செயலாளர் நாயகமுமான தோழர் க.பத்மநாபா மற்றும் அவருடன் மரணித்த தோழர்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி மரணமடைந்த எமது கட்சியின் தோழர்கள், ஏனைய அமைப்புக்களின் போராளிகள், பொதுமக்கள் தலைவர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 19ஆம் திகதியை தியாகிகள் தினமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனுட்டித்து வருகின்றது.
அந்த வகையில் 25வது தியாகிகள் தினத்தை இவ்வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி ஞாயிறன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் காலை 9மணி முதல் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு எமது கட்சி முடிவெடுத்துள்ளது.
unnamed
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ந.சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன் சிறப்புரையாற்றவுள்ளார்.
தியாகிகள் தின உரைகளை கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி தலைவர்கள் கௌரவ மாவை.சேனாதிராசா, கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ த.சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய கௌரவ மனோ கணேசன், கண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.பெ.முத்துலிங்கம் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
மேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வினையொட்டி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மட்டத்திலும், இலங்கை முழுவதிலும் வாழ்கின்ற 20 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் மத்தியிலும் தமிழ் இலக்கிய எழுத்தாக்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 300பேர்வரை கலந்துகொண்டு தமது ஆக்கங்களை அனுப்பிவைத்துள்ளனர். இவற்றில் சிறந்தவைகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன் ஊக்கமுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 35வருட வரலாற்றுக் கண்காட்சியும், தோழர்.பத்மநாபாவின் மீள்நினைவுகள் காணொளியும் விழாவில் இடம்பெறவுள்ளது.
சமூக ஆர்வலர்களையும், பொதுமக்களையும், பொது அமைப்புக்களையும், அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் பாடசாலை மாணவர்களையும், கல்விச்சமூகத்தையும் ஊடக அன்பர்களையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்மணி மேழிக்குமரன்
தியாகிகள்தின ஏற்பாட்டுக்குழுத் தலைவர்
SHARE