(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10ம் திகதி 2500 ரூபா வேதன உயர்வு வழங்க தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய அமைச்சர் ஊடான சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2500 ரூபா மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு சென்றடைய தடையாக இருப்பவர்களை முதலில் தீ மூட்ட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் துணிகரமாக தெரிவித்தார்.
தலவாக்கலை ஒலிரூட் கீழ்பிரிவு தோட்டத்தில் 15.01.2016 அன்று திறந்து வைக்கப்பட்ட புதிய கிராம வீடமைப்பு விழாவில் தொழிலாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
கடந்த காலங்களில் தைப்பொங்கல் விழா என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் கொட்டகலையில் கொண்டாடப்பட்டது. மாமிச உணவு போட்டு மக்களை வசப்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்று இந்த 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய அதிகாரிகளும் மாகாண சபை உறுப்பினர்களுமாக ஒரே மேடையில் தொழிலாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டாடும் நல் நாளாக அமைந்துள்ளது.
அமரர்.சந்திரசேகரனின் நினைவாக அவரின் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த தனி வீடு கிராமம் மலையக வரலாற்றில் ஓர் இடத்தினை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் மலையகத்தின் தம்பி என ஒருவர் தான் தம்பட்டம் அடித்து வந்தார்.
இன்று மூன்று அண்ணன்மார்கள் நான்கு தம்பிமார்கள் ஒரே மேடையில் முதன்முறையாக அமர்ந்து மக்கள் சேவையை முன்னெடுக்கின்றோம்.
தோட்ட தொழிலாளர்களுக்கு வேதனம் தந்த வேதனையை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் இம்மக்களுக்கான உரிமை பாதுகாக்க வேண்டும் என நான் தீ குளிக்க பாராளுமன்றத்தில் துணிகரத்தை காட்டினேன்.
ஆனால் இது நாடகம் என்றார்கள். மக்களின் உரிமைக்காக நான் செய்தது தவறா ? என கேள்வி எழுப்பிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பார்வை தொழிலாளர் பக்கம் திரும்பியுள்ளது.
இம்மாதம் 10ம் திகதி சம்பள கொடுப்பனவில் 2500 ரூபா சம்பள உயர்வுடன் சம்பளம் தர தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க எவறாவது தடையாக இருந்தால் அவர்களை முதலில் தீ மூட்ட வேண்டும் என்றார்.